பி.இ. கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு: முதல் 10 இடங்களில் 7 பேர் மாநில கல்வித் திட்டத்தின் கீழ் படித்தவர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 20, 2019

பி.இ. கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு: முதல் 10 இடங்களில் 7 பேர் மாநில கல்வித் திட்டத்தின் கீழ் படித்தவர்கள்

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.



சென்னை கிண்டி தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.
இதில், முதல் 10 ரேங்குகளில் 7 பேர், மாநில கல்வித் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 முடித்தவர்கள். இரண்டு பேர் சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் கீழும், ஒருவர் ஆந்திர மாநில கல்வித் திட்டத்தின் கீழும் படித்தவர்கள் ஆவர்.



2019-20-ஆம் கல்வியாண்டுக்கான பி.இ. கலந்தாய்வு ஜூன் 25-ஆம் தேதி தொடங்க உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க 1,33,116 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஜூன் 7 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் 1,04,406 பேர் மட்டுமே பங்கேற்றனர்

இவர்களில் தகுதியுள்ள 1,03,150 பேருக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். இந்த விவரங்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக இணையதளத்திலும் உடனடியாக வெளியிடப்பட்டது.



நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து, அமைச்சர் அளித்த பேட்டி:
2019-20-ஆம் ஆண்டுக்கான பி.இ. கலந்தாய்வில் தமிழகம் முழுவதும் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளின் 1,72,940 பி.இ. இடங்கள் இடம்பெற்றுள்ளன.


 இவற்றில், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சார்பில் ஒப்படைக்கப்பட்ட நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 27,340 ஆகும்.
பி.இ. இடங்களில் சேர்க்கை பெறுவதற்காக விண்ணப்பித்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பிலும் பங்கேற்றவர்களில் தகுதியுள்ள 1,03,150 பேருக்கான தரவரிசைப் பட்டியல் இப்போது வெளியடப்பட்டிருக்கிறது. இந்தத் தரவரிசைப் பட்டியலை விண்ணப்பதாரர்கள் பார்வையிட்டு சந்தேகங்கள் அல்லது குறைபாடுகளைத் தெரிவிப்பதற்காக 4 நாள்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.


 அவ்வாறு குறைபாடுகள் எதுவும் இருந்தால் 044 - 22351014, 22351015, 22350523, 22350527, 22350529 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
இவர்களுக்கான கலந்தாய்வு வரும் 25-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.


 இந்தப் பிரிவின் கீழ் 216 பேர் விண்ணப்பித்துள்ளனர். இரண்டாம் நாளான ஜூன் 26-இல் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த பிரிவின் கீழ் 1,537 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஜூன் 27-இல் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். இந்தப் பிரிவின் கீழ் 4,616 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


 பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 26 முதல் 28 வரை கலந்தாய்வு நடைபெறும். இதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என்றார் அவர்.



மேலும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள பொதுப் பிரிவு ஏழை மாணவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை, தமிழகத்தில் 2019-20-ஆம் கல்வியாண்டில் அமல்படுத்தப்படாது. அடுத்த ஆண்டுதான் அமல்படுத்தப்படும்.


 அதுபோல, புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து கல்வியாளர்கள், உயர் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தமிழகத்தின் கருத்து மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தப்படும்.
தமிழகத்தில் நிலவிவரும் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.


 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இதுபோல் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவது தெரியவந்தால், உடனடியாக அவை பூர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.



முதல் 10 பேரில் 7 பேர் மாணவர்கள்: பி.இ. தரவரிசைப் பட்டியிலில் முதல் பத்து பேரில் 7 பேர் மாநில கல்வி வாரியத்தில் படித்தவர்கள் என்பதோடு, அவர்களில் 7 பேர் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



மாநில கல்வி வாரியத்தின் கீழ் படித்த ஜி. அரவிந்த் என்ற மாணவர் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்ணுடன் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.


 அவருக்கு அடுத்தபடியாக எஸ்.பி.ஹரிஷ்பிரபு (200), பிரதீபா செந்தில் (200), இ.வி.லல்லு பிரசாத் (199.75), ஆர்.சிவ்சுந்தர் (199.5), எஸ்.ஸ்ரீபிரியன் (199.5), எஸ்.என்.வினோதினி (199.5), ஆர்.ஜோன் ஜெனிஃபர் (199.5), ஜி.கார்த்திக் பாலாஜி (199.5). கே.கௌஷிக் (199.5) ஆகியோர் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளனர்

No comments:

Post a Comment