தொலைநிலைப் பட்டப் படிப்புகள்: தமிழகத்தில் கூடுதலாக 2 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 28, 2019

தொலைநிலைப் பட்டப் படிப்புகள்: தமிழகத்தில் கூடுதலாக 2 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி

தமிழகத்தில் கூடுதலாக 2 பல்கலைக்கழகங்கள் தொலைநிலைப் படிப்புகளை வழங்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி அளித்துள்ளது.


அதன்படி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்பட 10 பல்கலைக்கழகங்களின் சார்பில் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகள் செல்லும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இந்த 10 கல்வி நிறுவனங்களைத் தவிர பிற பல்கலைக்கழகங்கள் வழங்கும் தொலைநிலைப் படிப்புகள் செல்லாது.


தொலைநிலைப் படிப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னர், திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017) 2017 ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.

அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றது.


அந்த அறிவிப்பின்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.



இந்தப் புதிய நிபந்தனை காரணமாக, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் தகுதியைப் பெற்றன.



கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என பிற பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியாத நிலை உருவானது.
அதன் பின்னர், 2018 டிசம்பர் 31-ஆம் தேதி இரண்டாவது பட்டியலை யுஜிசி வெளியிட்டது.


 அந்தப் பட்டியலின்படி சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய நான்கு கல்வி நிறுவனங்களுக்கு 2022-23 கல்வியாண்டு வரை தொலைநிலைப் படிப்புகளை வழங்க அனுமதி அளித்தும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு 2019-20 கல்வியாண்டு வரை அனுமதி அளித்தும் அறிவித்திருந்தது.
பின்னர், 2018 மே 8-ஆம் தேதி மூன்றாவது பட்டியலை யுஜிசி வெளியிட்டது.


அதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கும், தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என கூடுதலாக மூன்று கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அனுமதி அளித்தது.



இந்நிலையில், யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்ட நான்காவது பட்டியலின்படி, கூடுதலாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு அரசு பல்கலைக்கழகங்களுக்கு 2019-20 (2019 ஜூலையில் தொடங்கி 2020 ஜனவரி வரை) கல்வியாண்டுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


எந்தெந்த பல்கலைக்கழகங்கள்


 சென்னைப் பல்கலைக்கழகம்,
 அண்ணா பல்கலைக்கழகம்,
 தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்,
 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்,
 மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,
 தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்,
 மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
 எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்,
 தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
 சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய 10 பல்கலைக்கழகங்களின் தொலைநிலைப் படிப்புகள் மட்டுமே செல்லும் நிலை உருவாகியிருக்கிறது.

No comments:

Post a Comment