இன்னும் 4 ஆண்டுகளில் ஜிஎஸ்டி வரி அறவே இருக்காது: விக்கிரமராஜா - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 6, 2019

இன்னும் 4 ஆண்டுகளில் ஜிஎஸ்டி வரி அறவே இருக்காது: விக்கிரமராஜா

இன்னும் 4 ஆண்டுகளில் ஜிஎஸ்டி வரி அறவே இருக்காது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் அந்த அமைப்பின் கிளை சார்பில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசியதாவது:
வணிகர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஜிஎஸ்டி வரியை அகற்றிட வலியுறுத்தி வருகிறோம். இன்னும், 4 ஆண்டுகளில் ஜிஎஸ்டி வரி அறவே இருக்காது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான நெகிழிப் பொருள்களை ஒழிக்க வணிகர்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
எனினும், அதிகாரிகள் பறிமுதல் செய்யும் நெகிழிப் பைகள் மீண்டும் வணிகர்களிடமே விற்பனைக்கு வருகின்றன. எனவே, பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பைகளை விற்பனைக்காக திரும்ப அளிக்கும் அதிகாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகர்களின் நலன் சார்ந்த திட்டங்களை மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பயனாக, மத்திய அரசு வணிகர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்கிறது. உள்ளாட்சி, அறநிலையத் துறை கடைகளில் வாடகையை கணிசமாக உயர்த்தியுள்ளதால், வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, வணிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து கடை வாடகையை நிர்ணயம் செய்திட வேண்டும். வரி கணக்கு மறு ஆய்வு என்ற பெயரில் வணிகர்களிடம் கையூட்டு பெறும் வணிக வரித் துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதையொட்டி, செய்யாறு நகர தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கிளை சார்பில், கட்டட நிதியாக ரூ.1.66 லட்சத்துக்கான காசோலையை மாநிலத் தலைவர் விக்ரமராஜாவிடம் வழங்கினர். இதில், மாவட்டத் தலைவர் மண்ணுலிங்கம் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ராஜசேகர், மாவட்டச் செயலர் ராதா, பொருளாளர் செந்தில்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் ஆ.மோகனவேல், நகரச் செயலர் தெய்வசிகாமணி ஆகியோர் வரவேற்றனர்.

No comments:

Post a Comment