அங்கன்வாடி சூழலில் தொடரும் மழலையர் வகுப்புகள்: பெற்றோர்கள் அதிருப்தி! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 30, 2019

அங்கன்வாடி சூழலில் தொடரும் மழலையர் வகுப்புகள்: பெற்றோர்கள் அதிருப்தி!

மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டு 20 நாள்களுக்கு மேலாகியும், எவ்வித மாற்றமுமின்றி அங்கன்வாடி சூழலிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருவதால் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.



தமிழகத்தில் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தின் அருகில் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடக்குவதற்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 59 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் கடந்த ஜூன் 3-ஆம் தேதி தொடங்கப்பட்டன.


 திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் வட்டாரங்களில் 5, நத்தம் வட்டாரத்தில் 3, சாணார்பட்டி வட்டாரத்தில் 7, வடமதுரையில் 4, ரெட்டியார்சத்திரத்தில் 4, வேடசந்தூரில் 1, குஜிலியம்பாறையில் 5, பழனி நகர் மற்றும் புறநகரில் 13, ஒட்டன்சத்திரத்தில் 2, தொப்பம்பட்டியில் 4, நிலக்கோட்டையில் 5, கொடைக்கானலில் 4, வத்தலகுண்டுவில் 2 என 59 மையங்களில் மழலையர் வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.

மொத்தமுள்ள 59 மையங்களில், திண்டுக்கல் மற்றும் பழனி நகர் நீங்கலாக பிற 57 மையங்கள் ஊரகப் பகுதியிலேயே தொடங்கப்பட்டுள்ளன.


 தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகளும் சிறப்பாக நடைபெறும் என கருதி, பெற்றோர்களும் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டியுள்ளனர்.


 அந்த வகையில், சுமார் 900 மாணவர்கள் மழலையர் வகுப்பில் சேர்ந்துள்ளனர். இந்த மழலையர் வகுப்புகளுக்கு, அந்தந்த வட்டாரத்திலுள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


 நத்தம் வட்டாரத்திலுள்ள 2 மையங்கள் நீங்கலாக பிற மழலையர் வகுப்புகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளின் மழலையர் வகுப்புகள் மீதான பொதுமக்களின் மோகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே அரசுப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன


. ஆனால், பள்ளி தொடங்கப்பட்டு 20 நாள்கள் கடந்துவிட்டபோதிலும், மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. சீருடை வழங்கப்படுமா என்பதும் தெரியவில்லை.


 அதேபோல், குழந்தைகளுக்கு எளிய முறையில் கற்பிப்பதற்குத் தேவையான கற்றல் உபகரணங்கள், வரைபடங்கள் உள்ளிட்ட எவ்வித பொருள்களும் இதுவரை வழங்கப்படவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வகுப்பறைக்கான உள்கட்டமைப்பு ஏற்படுத்தவில்லை என்பது பெற்றோர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.



இதுபோன்ற காரணங்களால், மழலையர் வகுப்புகள் என பெயர் மாற்றம் பெற்றாலும், அங்கன்வாடி மையங்களாகவே தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாக பெற்றோர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி கூறியது:


 தனியார் பள்ளிகளிலுள்ள மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் தொடர்பான பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.


 மேலும், எழுத்துப் பயிற்சிக்காக மட்டும் 4 வகையான நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளியில் தொடங்கப்படும் மழலையர் வகுப்புகளிலும் இதுபோன்ற பாடப் புத்தகங்கள், எழுத்துப் பயிற்சி ஏடுகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே எங்கள் குழந்தைகளை சேர்த்தோம்.



அங்கன்வாடி அமைப்பாளருடன், தற்போது ஒரு இடைநிலை ஆசிரியர் மட்டுமே கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர, மழலையர் வகுப்புக்கான எவ்வித சூழலும் இங்கு ஏற்படுத்தப்படவில்லை என்றார்.
இதுகுறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியது:


மழலையர் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள், எழுத்துப் பயிற்சி ஏடுகள், சீருடை உள்ளிட்டவற்றை தனியார் பள்ளிகளுக்கு இணையாக வழங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை எழுப்புகின்றனர். ஆனால், அதற்கான எவ்வித அறிவிப்பும் இயக்குநர் அலுவலகத்திலிருந்து இதுவரை வரவில்லை.



நத்தம் வட்டாரத்திலுள்ள 2 மழலையர் பள்ளிகளுக்கு, நத்தம் மற்றும் அருகிலுள்ள சாணார்பட்டி வட்டாரங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடங்கள் இல்லாததால் நிரப்பப்படாமல் உள்ளது.


 திண்டுக்கல் புறநகர் பகுதியிலிருந்து பணி மாறுதல் செய்வது குறித்து இயக்குநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment