புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா அறிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 24, 2019

புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா அறிக்கை

கல்விக்கொள்கை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல், நம் கருத்துகளை முன் வைக்காமல் அமைதியாக கடந்து விடுகிறோம். அந்த அமைதி நம் குழந்தைகளின் எதிர்காலத்தையே பாதிக்கும் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவை வெளியிட்டிருக்கும் மத்திய அரசு, ஜூன் 30-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து கூறலாம் என்று அறிவித்துள்ளது.


அதில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை, இந்தி கட்டாயம் என உடனடியாக சர்ச்சை கிளம்ப பின்னர் அந்த பகுதிகள் நீக்கப்பட்டன

இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை குறித்து நமக்கு ஏற்புடைய, ஏற்பில்லாத கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “30 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிற கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதை பற்றிய உரையாடல்களோ, விவாதங்களோ இன்னும் போதிய கவனம் பெறவில்லை. அனைவருக்கும் சமமான கல்வியை வழங்க என்ன செய்ய வேண்டும்?

கல்வி கற்பிக்கிற மொழி கொள்கையில் போதிய தெளிவு இருக்கிறதா? நம் குழந்தைகளின் எதிர்காலத்தோடு தொடர்புடைய இதுபோன்ற பல கேள்விகளுக்கு புதிய கல்விக் கொள்கையின் பதில் என்ன? நம் எல்லோருக்கும் கல்வி பற்றிய கருத்துகள் உண்டு.

 ஆனால் கல்விக் கொள்கை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல், நம் கருத்துகளை முன் வைக்காமல் அமைதியாக கடந்து விடுகிறோம். அந்த ‘அமைதி’ நம் குழந்தைகளின் எதிர்காலத்தையே பாதிக்கும்.

கல்விக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்கிற பெற்றோர்கள் புதிய கல்விக் கொள்கை பற்றி படித்து தெரிந்து கொள்வது அவசியம்.

ஜூன் 30-ம் தேதிக்குள் இந்தக் கல்விக் கொள்கை பற்றிய நமக்கு ஏற்புடைய, ஏற்பில்லாத கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையை, தமிழில் மொழிபெயர்த்த அறிஞர் குழுவிற்கு நன்றிகள்.

நம்முடைய பங்கேற்பு மட்டுமே, நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், சிறந்த எதிர்காலத்தையும் அளிக்கும். அனைவரும் பங்கேற்று சமூக ஊடகங்களில் உரையாடுவோம். தமிழக கல்வியாளர்களிடமிருந்து விளக்கங்களைப் பெற்று ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுப்போம். கல்வியே ஆய்தம்.. கல்வியே கேடயம்.” என்று கூறியுள்ளார்

1 comment:

  1. தாய் மொழி கல்வி மிகவும் அவசியம்.
    ஆங்கிலம் உலகலாவிய அறிவை நமக்கு அளிப்பது எனவே பேச்சு திறனை அதிகரிக்க ஆவண செய்ய வேண்டும்.
    கணித அறிவே நமது சிந்தனை திறனை வளர்க்கும் எனவே எளியமுறையில் கணித அறிவை வளர்க்க தேவையான அனைத்து வகையான கணித பாடங்களை மட்டுமே சேர்க்க வேண்டும்
    அறிவியல் பாடத்தை பொருத்தவரை அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அறிவை வளர்க்க தக்க அறிவியல் பாடங்களை மட்டுமே சேர்க்க வேண்டும்
    வரலாறு பாடத்தை பொருத்தமட்டில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த அரசர்கள் அவர்கள் காலத்தில் செய்த மக்கள் நலத் திட்டங்கள் விடுதலை போராட்ட வீரர்கள் கல்வியில் சிறந்த மேதைகள் சமூக சீர்திருத்த வாதிகள் தன்னலம் கருதாமல் உழைக்கும் அனைத்து துறையினர் பற்றியும் இந்திய அளவில் மிக முக்கியமான தலைவர்கள் பற்றிய தகவல்களை மாணவர்கள் பெற்று கொள்ளும் படியான பாடங்களை சேர்க்க வேண்டும்.
    புவியியல் பாடத்தில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விவசாய வளர்ச்சியைப் பொருத்தே அமைவதால் விவசாயம் சார்ந்த நீர் மேலாண்மை பற்றிய அடிப்படை அறிவை வளர்க்கும் படியான பாடங்களை சேர்க்க வேண்டும்

    ReplyDelete