பல் துலக்குவது முதல் துணி துவைப்பது வரை... தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஏ.ராமன் 'டிப்ஸ்' - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 30, 2019

பல் துலக்குவது முதல் துணி துவைப்பது வரை... தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஏ.ராமன் 'டிப்ஸ்'

வீட்டில் வாளிகளில் தண்ணீர் பிடித்து பயன்படுத்துவதால் நாளொன்றுக்கு ஒவ்வொரு குடும்பமும் 300 லிட்டர் நீரை சேமிக்க முடியும் என வேலுார் கலெக்டர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பருவ மழை பொய்த்ததால் சில இடங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது.


 பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.இந்நேரத்தில் பொதுமக்கள் விலை மதிப்பில்லாத தண்ணீரை பாதுகாக்க வேண்டும்.


வீடுகளில் மக்கள் நேரடியாக குழாய் மூலம் குளிக்கும்போது 100 லிட்டர் செலவாகிறது. இதை தவிர்த்து வாளியில் தண்ணீர் பிடித்து குளிக்கும்போது 18 லிட்டர் மட்டுமே செலவாகும்.


 இதன்மூலம் 82 லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும்.அதேபோல் பல் துலக்கும்போது குழாயில் நேரடியாக தண்ணீரை பயன்படுத்தினால் 5 லிட்டர் செலவாகிறது.


இதைத் தவிர்த்து குவளையில் தண்ணீர் பிடித்து பயன்படுத்தும்போது 750 மி.லி. தண்ணீர் மட்டுமே செலவாகும். இதனால் 4.25 லிட்டர் தண்ணீர் சேமிக்க முடியும்.


கழிப்பறை உபயோகத்தில் தொட்டியில் 20 லிட்டர் தண்ணீர் உபயோகிப்பதை தவிர்த்து வாளியின் மூலம் 6 லிட்டர் பயன்படுத்தினால் 14 லிட்டர் தண்ணீரைச் சேமிக்க இயலும்.ஆண்கள் முகச்சவரம் செய்யுபோது குழாயை பயன்படுத்துவதால் 5 லிட்டர் தண்ணீர் வீணாகிறது.


குவளையில் தண்ணீர் பிடித்து முகச்சவரம் செய்யும்போது 750 மி.லி. தண்ணீர் மட்டுமே செலவாகும்.துணி துவைக்க குழாய் நீரை பயன்படுத்தினால் 116 லிட்டர் செலவாகும்.


இதைத் தவிர்த்து வாளிகளில் நீர் பிடித்து துணிகளை துவைப்பதால் 36 லிட்டர் மட்டுமே செலவாகும். இதனால் 80 லிட்டர் வரை தண்ணீரை சேமிக்க முடியும்.


தொட்டியில் உள்ள செடிகளுக்கு குழாய் மூலம் நீர் பாய்ச்சினால் 50 லிட்டர் தண்ணீர் செலவாகும். ஆனால் வாளியில் தண்ணீர் பிடித்து செடிகளுக்கு தெளிப்பதால் 10 லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவாகி 40 லிட்டர் சேமிக்கலாம்.


 வாகனங்களை கழுவுவதற்கு குழாயில் 100 லிட்டர் செலவாகும். அதற்கு பதிலாக வாளியில் பிடித்து பயன்படுத்தினால் 18 லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவாகும்.


இதன் மூலம் 82 லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம்.தோட்டச் செடிகளுக்கு குழாயில் 100 லிட்டர் வரை தண்ணீர் பாய்ச்சுவதைத் தவிர்த்து நீர் தெளிப்பான் பயன்படுத்துவதன் மூலம் 75 லிட்டர் தண்ணீர் சேமிக்க முடியும்.


இவ்வாறு தண்ணீரை பயன்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் குறிப்பிடத்தக்க வேறுபாடைக் காண இயலும்.எனவே இத்தகைய வழிமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு குடும்பத்தினரும் நாளொன்றுக்கு 300 லிட்டர் வரை தண்ணீரை சேமிக்க வேண்டும்.


இயற்கை வழங்கும் விலைமதிப்பற்ற நீரை வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment