பள்ளிகளுக்கு சொந்த செலவில் தண்ணீர் வாங்கும் ஹெச்.எம்கள்: - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 18, 2019

பள்ளிகளுக்கு சொந்த செலவில் தண்ணீர் வாங்கும் ஹெச்.எம்கள்:

தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் தண்ணீர் வாங்கி ஊற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், அனைத்து நீர்நிலைகளும் வறண்டன.


இதனால், மாநிலம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் கேட்டு வீதிகளுக்கு வந்து போராடும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து, தண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


 கொளுத்தும் கோடை வெயில் மற்றும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, நடப்பாண்டு பள்ளிகளை தாமதமாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரினர்.


 ஆனால், திட்டமிட்டபடி கடந்த 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் போதுமான தண்ணீர் வசதி இல்லை.

இதனிடையே சேலம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க, சொந்த செலவில் தண்ணீர் வாங்கி ஊற்றும் நிலைக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:


 சேலம் மாவட்டத்தில் 1,400க்கும் மேற்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளிகளும், 250க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 50 சதவீத பள்ளிகளில் போதுமான குடிநீர் வசதி இல்லை.


 அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது நிலவும் கடும் தட்டுப்பாடு காரணமாக மாணவர்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லை. இதனால், பல பள்ளிகளில் கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


 இதனிடையே எந்தவொரு பள்ளியிலும் குடிநீர் தொடர்பாக பிரச்னை வரக்கூடாது, கழிப்பறைகளை முழுமையாக பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் கட்டளையிடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் குடிப்பதற்காக தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகிறோம்.

சுமார் 1,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு லோடு 300 முதல் 400 வரை விற்பனை செய்யப்படுகிறது. வாரத்திற்கு 6 லோடு வரை வாங்கி ஊற்றி நிலைமையை சமாளித்து வருகிறோம்.


 இதற்கான தொகையை தலைமை ஆசிரியர்கள் தான் வழங்குகிறோம். ஒருசில பள்ளிகளில், சக ஆசிரியர்களும் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.


 ஆனாலும், கழிவறை பயன்பாட்டிற்கு இன்னமும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம். எனவே, இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment