சிரிப்பு... பயிற்சி... பாடம்... அசத்தும் அரசுப் பள்ளி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 25, 2019

சிரிப்பு... பயிற்சி... பாடம்... அசத்தும் அரசுப் பள்ளி

கற்பதில் ஆர்வத்தை தூண்டி, மாணவர்களை உற்சாகத்துடன் படிக்க வைக்கும்  எளிய நடைமுறையை உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது.

பள்ளியை பார்த்ததும் ஒதுக்குவோம் மழையிலே.... என்ற கண்ணதாசனின் பாடல் வரி, தலைமுறைகள் பல கடந்தாலும் கூட, இன்னமும் பள்ளி செல்லும் மாணவர்கள் பலருக்கும் பொருந்தும்.

பள்ளிப் பாடம் பிள்ளைகளுக்கு வேப்பங்காயாய் கசப்பது இன்றும் கூட பல வீடுகளில் பெற்றோர் சந்திக்கும் அன்றாட சங்கடங்களில் ஒன்று. ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பள்ளிக் கூடம் ஒன்று மாணவர்கள் ஆர்வத்துடன் பாடம் படிக்க வைக்கிறது.

உசிலம்பட்டி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியரான மதன் பிரபு, பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பாடம் கற்பதில் இருக்கும் இனிமையை உணர்த்த, நடப்பு கல்வி ஆண்டு முதல் புதிய யுக்திகளை கையாளத் தொடங்கினார்.

பள்ளிக்கு வந்த உடனே புத்தகத்தை பிள்ளைகளின் கைகளில் திணிக்காமல், அவர்களை வாய் விட்டு சிரிக்க வைக்கிறார். சிரிப்பே மிகச்சிறந்த மருந்து என்பதை அவர் பிஞ்சு குழந்தைகள் மூலம் செயலில் காட்டுகிறார்.

சிரித்து, சிரித்து உள்ளம் நெகிழ்ந்து நிற்கும் குழந்தைகளை, அவரவர் உடல் திறனுக்கு ஏற்ப உட்கார்ந்து, எழுந்திருக்கும் பயிற்சியை செய்ய வைக்கிறார். இதன் மூலம் குழந்தைகளின் உடல் நலனும், உள்ள நலனும் மேம்படுவதோடு, ஆசிரியர் - மாணவர் உறவு மேலும் வலுப்படுகிறது.

இப்படி மாணவர்களின் மன இறுக்கத்தை தளர்த்திய பின், அந்த பள்ளியில் பாடம் தொடங்க, பிள்ளைகளும் ஆர்வத்துடன் படிக்கிறார்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சிகளை பலரும் கேலி செய்தாலும், இப்போது, பள்ளி பிள்ளைகள் ஆர்வத்துடன் வகுப்புகளுக்கு வருவதும், கற்பதில் அவர்களின் திறன் அதிகரித்து இருப்பதும், மதன் பிரபுவின் திட்டத்திற்கு மாணவர்கள், சக ஆசிரியர்கள், பெற்றோர் என அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இயற்கை மருத்துவமுறைப் படி சிரிப்பது, உடற்பயிற்சி செய்வது குழந்தைகளை புத்துணர்ச்சி அடைய வைக்கும். இத்திட்டத்தை அனைத்து அரசு பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment