நிறைவுபெற்றது பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு: 16 கல்லூரிகளில் ஒருவர்கூட சேரவில்லை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 28, 2019

நிறைவுபெற்றது பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு: 16 கல்லூரிகளில் ஒருவர்கூட சேரவில்லை

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுபெற்ற நிலையில், 16 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் 82 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. தமிழகம் முழுவதும் 13 பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரம்பியிருக்கின்றன.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.71 லட்சம் பி.இ. இடங்களுக்கான சேர்க்கையை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் நடத்தியது.

முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதன் பின்னர் பொதுப் பிரிவினருக்கான, 4 சுற்றுகளைக் கொண்ட ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கியது.இந்தப் பிரிவுக்கு கலந்தாய்வு தொடங்கியபோது 1,67,101 இடங்கள் இருந்தன.

கடைசிச் சுற்றான நான்காம் சுற்று கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்து, மாணவர்களுக்கான இறுதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டது


. 90 ஆயிரம் இடங்கள் காலி:

பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் மொத்தமிருக்கும் 1,67,101 இடங்களில் 76,364 இடங்கள் மட்டுமே நிரம்பின. 90,737 இடங்கள் காலியாக உள்ளன.

16 கல்லூரிகளில் ஒருவர்கூட சேரவில்லை: கலந்தாய்வின் முடிவில், தமிழகம் முழுவதும் உள்ள 479 கல்லூரிகளில் இரண்டு தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்பட 13 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரம்பியிருக்கின்றன.

157 பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கும் அதிமான இடங்கள் நிரம்பியிருக்கின்றன


. மற்ற கல்லூரிகள் அனைத்திலும் 50 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பியிருப்பதோடு, அவற்றில் 82 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

44 கல்லூரிகளில் 5 சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் நிரம்பியுள்ளன. 16 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம்கூட நிரம்பவில்லை.

இயந்திரவியல் பிரிவில் சேர்க்கை சரிவு: பொறியியல் பிரிவுகளைப் பொருத்தவரை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பி.இ. இயந்திரவியல் பிரிவில் மாணவர் சேர்க்கை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.


 பி.இ. கட்டுமானப் பொறியியல், மின்னியல் மின்னணுவியல் பொறியியல், மின்னணுவியல் உபகரணவியல் பொறியியல், விமானப் பொறியியல் (ஏரோனாட்டிகல்) படிப்புகளில் சேர்க்கை சரிந்திருக்கிறது.


 பி.இ. கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் மற்றும் பி.இ. தகவல் தொழில்நுட்பம் (ஐடி) ஆகிய மூன்று பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது.110 கல்லூரிகள் தொடர்ந்து இயங்குவது கடினம்

மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ள 110 பொறியியல் கல்லூரிகள் தொடர்ந்து இயங்குவது கடினம் என்கின்றனர் கல்வியாளர்கள். மேலும், எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு பி.இ. இயந்திரவியல் பிரிவில் சேர்க்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது.

இதன் காரணமாக 250-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இயந்திரவியல் பிரிவு பேராசிரியர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகியிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ்காந்தி கூறியது:


 கடந்த ஆண்டுகளில் பி.இ. இயந்திரவியல் பிரிவில் அதிக மாணவர்கள் சேர்க்கை பெற்று வந்தனர். ஆனால், இந்த முறை நிலைமை மாறியிருக்கிறது.


தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின் நிலை மாறியிருக்கும் காரணத்தால், பி.இ. கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டுகளைவிட அதிகரித்திருக்கிறது. இந்தப் பிரிவுகள்தான், இந்த ஆண்டில் அதிக மாணவர்கள் சேர்ந்திருக்கும் பிரிவுகளாகவும் உள்ளன.

ஆனால், பி.இ. கணினி அறிவியல் பிரிவிலும்கூட 110 பொறியியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு (ஓ.சி.) இடங்கள் அதிக எண்ணிக்கையில் சேர்க்கையின்றி காலியாக உள்ளன.


அப்படியெனில், இந்தக் கல்லூரிகளை வேண்டாம் என மாணவர்கள் தவிர்த்திருப்பதே முக்கிய காரணம். மாணவர்கள் அதிகம் விரும்பும் பிரிவுகளிலேயே, சேர்க்கை நடைபெறாத இந்த 110 கல்லூரிகளும், தொடர்ந்து இயங்குவது கடினம்.

அதுபோல, 252 பொறியியல் கல்லூரிகளில் பி.இ. இயந்திரவியல் பிரிவில் ஓ.சி. இடங்கள் சேர்க்கையின்றி காலியாக உள்ளன. இதனால், இந்தப் பிரிவில் மற்ற சமூகத்தினருக்கான ஒதுக்கீட்டு இடங்களிலும் சேர்க்கை குறைந்திருக்கவே வாய்ப்புள்ளது


. சேர்க்கை இல்லாததால், ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் இந்தக் கல்லூரிகள் ஈடுபடும். எனவே, இந்த 252 கல்லூரிகளில் பணிபுரிந்துவரும் நூற்றுக்கணக்கான இயந்திரவியல் பிரிவு பேராசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது என்றார் ஜெயப்பிரகாஷ்காந்தி

No comments:

Post a Comment