தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ள தாகவும், சுமார் 1 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு வந்திருப்பதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில் பொதுவாக அரசு பள்ளிகள் என்றாலே, படிப்பு, இடவசதி, சுகாதாரம் கல்வித்தரம் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் சரியிருக்காது என்று மக்களிடையே கருத்து பரவலாக நிலவி வருகிறது.
அதற்கு ஏற்றார்போல் பல அரசு பள்ளிகளும் அத்தகைய கருத்துக்களை ஒத்தே இருந்து வருகிறது என்பது நாம் கண்கூடாக காணும் ஒன்று.
இந்நிலையில் தற்போது தமிழக அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட அதிக வசதிகளுடன் நவீன தொழில்நுட்பத்துடன் திகழ்ந்து வருவதோடு அரசு பள்ளிகளில் அளிக்கப்படும் இலவச சீருடை, மடிக்கணினி, புத்தகம், நோட்டு, கல்வி உபகரணபொருட்கள், காலனிகள், சைக்கிள், சுகாதாரமான சத்துணவு, ஸ்மார்ட் வகுப்புகள் யோகா, இடைநிறுத்தலை குறைக்கும் வகையில் மாணவ, மாணவியா்களுக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும், நாள்தோறும் பள்ளி கல்வித்துறை அதிரடியான அறிவிப்புகளும் அரசு பள்ளியில் மாணவா்கள் சேர்க்கையை அதிகரிக்க உந்து சக்தியாக இருந்து வருவது குறிப்பிட தக்கது.
மேலும் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் அபரிதமான கல்விக்கட்டணம் பொதுமக்களிடையே கடுமையாக அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில்,
தற்போது அரசுப் பள்ளிகளை பெரும்பாலான பெற்றோர்கள் நாடி வருகின்றனர்.
மேலும் ஒருசில நல்லுள்ளம் படைத்த அரசு அதிகாரிகளும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திய நிலையில்
நடப்பு கல்வியாண்டில் (2019-20) 2 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு இடம் மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த கல்வி ஆண்டில் (2018-19) 3.93 லட்சம் பேர் ஒன்றாம் வகுப்பு படித்த நிலையில், நடப்பு ஆண்டில், இரண்டாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 4.16 லட்சமாக உயர்ந்துள்ளது.
தனியார் பள்ளிகளிலிருந்து 23,032 பேர் இரண்டாம் வகுப்பில் இணைந்துள்ளனர். மூன்றாம் வகுப்பில் 30,744 மாணவர்களும், நான்காம் வகுப்பில் 27,868 மாணவர்களும், ஐந்தாம் வகுப்பில் 23,859 மாணவர்களும் புதிதாக இணைந்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் ஒரு லட்சம் வரையில் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2ம் வகுப்பு முதல் 5 வரையிலான வகுப்புகளில் புதிதாக இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
No comments:
Post a Comment