தரவரிசையில் மாநில அளவில் முதலிடம் பெற்றும் கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு அழைப்பு இல்லை: பழங்குடியின மாணவன் பரிதவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 29, 2019

தரவரிசையில் மாநில அளவில் முதலிடம் பெற்றும் கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு அழைப்பு இல்லை: பழங்குடியின மாணவன் பரிதவிப்பு

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசையில் எஸ்டி பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்றும் கலந்தாய்வுக்கு அழைப்பு வராததால் பழங்குடியின மாணவன் கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைக்குட்பட்ட சுண்டபோடு கிராமத்தை சேர்ந்தவர் உடுமுட்டு.


இவரது மகன் சந்திரன். பழங்குடியின மாணவனான இவர், கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 படித்தார். வேளாண் செயல்பாடுகள் தொழிற்பாடப்பிரிவில் படித்த சந்திரன், 444 மதிப்பெண் பெற்றார்.

இந்நிலையில், இந்தாண்டுக்கான தொழிற் பாடப்பிரிவில் சேர தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கும், கால்நடை மருத்துவப்படிப்பில் சேர தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்திற்கும் விண்ணப்பித்திருந்தார்.


 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட தொழிற் பாடப்பிரிவினருக்கான ஒட்டுமொத்த தர வரிசையில் 409வது இடம் பெற்றார். ஆனால், இட ஒதுக்கீடு தரவரிசை எண் வழங்கப்படவில்லை.


 இதேபோல், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்ட தொழிற்பாடப் பிரிவினருக்கான தரவரிசை பட்டியலில் ஒட்டு மொத்த தர வரிசையில் 146 மற்றும் இடஒதுக்கீடு தரவரிசையில் பழங்குடியினர் பிரிவில் முதல் இடமும் பெற்றார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் கடந்த 12ம் தேதி, கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 25ம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்பட்டது. ஆனால், இரு பல்கலைக்கழகங்களிலும் அவருக்கு சேர்க்கை வாய்ப்பு கிடைக்கவில்லை.

 வேளாண்மை செயல்பாடுகள் தொழிற்பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் 5 சதவீத இடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தமுள்ள 5,220 இடங்களில் 44 இடங்கள் மட்டுமே தொழிற்படிப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.


இதுபோல், கால்நடை மருத்துவ படிப்புக்கு மொத்தமுள்ள 360 இடங்களில் 18 இடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.  இந்த 18 இடங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவரை சேர்க்க வேண்டும்.

இந்நிலையில்தான், தரவரிசையில் முதல் இடம் பெற்ற போதிலும் மாணவர் சந்திரனுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு வரவில்லை.


 இதையடுத்து அவர் நேற்று கலெக்டர் கதிரவனிடம் மனு அளித்தார்.அதில் கூறியிருப்பதாவது:


 கால்நடை மருத்துவ பல்கலைக்கழக தரவரிசையில் எஸ்டி பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் முதல் இடம் பெற்றிருந்ததால் இங்கு சேர்க்கை அளிக்கப்படும் என்ற நம்பிக்கையில் வேறு எந்த படிப்பிற்கும் விண்ணப்பிக்கவில்லை. இந்நிலையில், எனக்கு கலந்தாய்விற்கே அழைப்பு அனுப்பவில்லை. இப்பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளேன்


. அதேசமயம், பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு 50%, வேளாண்மை தொழிற்பாடப்பிரிவு மாணவர்களுக்கு 50% ஒதுக்கீடு என்ற அடிப்படையில் வேளாண்மை மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment