அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கக்கோரி ஐகோர்ட் கிளை உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 22, 2019

அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கக்கோரி ஐகோர்ட் கிளை உத்தரவு

அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வுசெய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


அதேபோல மாணவர்களின் கற்கும் திறனையும் ஆய்வு செய்ய குழுக்களை அமைக்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


புதுக்கோட்டையை சேர்ந்த சௌபாக்யவதி என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், புதுக்கோட்டை, குலவைப்பட்டி பஞ்சாயத்து நடுநிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றிய நிலையில், 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை நாயக்கன்பட்டி பஞ்சாயத்து நடுநிலை பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.


இதையடுத்து அவர் பணியில் சேர்வதற்காக சென்ற போது அதிகாரிகள் தரப்பில் பணம் கேட்டதாகவும், அதனை வழக்காததால் முன்விரோதம் கொண்டு, முறையாக பணியாற்றவில்லை எனக்கூறி தன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆகவே, அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.


அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பட்டதாரி ஆசிரியர் சௌபாக்யவதி கற்பித்த வகுப்புகளில் தொடக்கக்கல்வி அலுவலர் சிறப்பு பார்வை மேற்கொண்ட போது, அடிப்படையான கேள்விகளுக்கு கூட மாணவ, மாணவிகள் பதிலளிக்கவில்லை.


ஆங்கில எழுத்துக்கள் பல மாணவர்களுக்கு தெரியவில்லை என்றும், அதேபோல பாட குறிப்பு உள்ளிட்ட பதிவேடுகளை ஆசிரியை முறையாக பராமரிக்கவில்லை.


எனவே அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க மெமோ அனுப்பப்பட்டது என வாதிட்டார்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை குறிப்பிட்ட இடைவெளியில் முறையாக  சோதித்து அறியவேண்டும் என்றும், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக வகுப்பு எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பெருமளவில் முன்வைக்கப்படும் நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம்.

ஆசிரியர் பணி என்பது புனிதமான பணி என்றும், வகுப்பறைகளில் வகுப்பு எடுப்பது என்பது ஒரு கலை என நீதிபதி தெரிவித்தார்.


 மாணவர்களின் அறிவு திறனை வளர்க்கும் வகையில், ஆசிரியர்களின் கற்பித்தல் சிறப்பானதாகவும், பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்க வேண்டும்.


 ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வருவதையும், முறையாக கற்பித்தல் செய்வதை உறுதி செய்ய பல்வேறு விதிகள் உள்ளன.

இதையடுத்து, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய மாவட்டந்தோறும் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளார்.


அதேபோல, அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மாணவர்களின் கற்றல் திறன், வாசிக்கும் திறன், எழுத்துத்திறன், பொது அறிவுத்திறன் ஆகியவற்றை மாணவர்களுடன் கலந்துரையாடி அறிய வேண்டும் என ஒவ்வொரு மாவட்ட கல்வி அலுவலருக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதேபோல ஊரக பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அங்குள்ள மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறன் குறைவாக இருக்கிறது என கூறுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.


இதையடுத்து, இந்த வழக்கில் ஆசிரியர் பாடம் நடத்திய வகுப்புகளில் தொடக்கக்கல்வி அலுவலர் கேட்ட அடிப்படையான கேள்விகளுக்கு கூட மாணவர்கள் பதிலளிக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

எனவே, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையை தொடரவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.


தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் சிறப்பு குழுக்களை அமைக்கவேண்டும் என்றும், இந்த குழுவானது ஆசிரியர்கள் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதேபோல பள்ளிக்கல்வித்துறையின் கொள்கைகள் பள்ளிகளில் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யவும் குழுக்களை அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.


ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதிக்க நிபுணர் குழுக்களின் அறிவுறுத்தலின் பேரில் வினாவிடை தொகுப்பை உருவாக்கவும், தொடக்கக்கல்வி மாணவர்கள் அடிப்படை திறன்களை பெறுகிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அதில் தவறும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment