எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை: எத்தனை பேர் அரசுப் பள்ளி மாணவர்கள்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 15, 2019

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை: எத்தனை பேர் அரசுப் பள்ளி மாணவர்கள்?

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் எத்தனை பேருக்கு இம்முறை எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் கிடைத்துள்ளன என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.



இதனால், தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் நீட் பயிற்சி மையங்களின் செயல்பாடுகளை மதிப்பிட முடியாத சூழல் நிலவுகிறது.



நீட் தேர்வால் மாநில வழி பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், மாணவர் சேர்க்கை விவரங்களில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்காமல் இருப்பது அந்தக் கூற்றுக்கு வலுசேர்க்க வாய்ப்பை ஏற்படுத்துகிறது.


 கடந்த மே மாதம் நடைபெற்ற எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வினை நாடு முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்த நிலையில், அவர்களில் 7.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் மொத்தம் 1.23 லட்சம் பேர் தேர்வெழுதினர்.


 அவர்களில் 59,785 பேர் தேர்ச்சியடைந்தனர்இதன் மூலம் கடந்த இரு ஆண்டுகளாக 40 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் இம்முறை 48.70 சதவீதமாக உயர்ந்தது.



அவர்களில் அரசுப் பள்ளி மாணவர்களும் கணிசமான எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகின.


இந்தச் சூழலில்தான், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மாநில தரவரிசைப் பட்டியல் கடந்த 6-ஆம் தேதி வெளியிடப்பட்டது.



ஆனால், அதில் மாநில பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்த சிறப்பு விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.



ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பிலும்கூட முதல் பத்து இடங்களில் உள்ள மாணவர்களின் விவரங்கள் மட்டுமே முழுமையாக இடம்பெற்றிருந்தன.மற்ற மாணவர்கள் பயின்ற பள்ளியின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட தகவல்கள் அதில் இல்லை.


அதனால், எத்தனை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்கக் கூடும் என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.



கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழக மருத்துவக் கலந்தாய்வில் சி.பி.எஸ்.இ. மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களுமே அதிக அளவில் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.



தமிழகத்தில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 2017-ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த ஐந்து மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்ததாக செய்திகள் வெளியாகின.



அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கி தமிழக அரசு பயிற்சியளித்து வருகிறது.



அதன் காரணமாக கடந்த ஆண்டில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1,337ஆக உயர்ந்தது. இருந்தபோதிலும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அவர்களில் வெகு சிலருக்கு மட்டுமே இடங்கள் கிடைத்தன.



இந்த நிலையில், நிகழாண்டில் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.


அவை வெளியானால் மட்டுமே அரசு சார்பில் நடத்தப்படும் நீட் பயிற்சி மையங்கள் ஆக்கபூர்வமாக உள்ளனவா என்பதற்கு விடை தெரியும்.

No comments:

Post a Comment