வங்கித் தேர்வு எழுத வந்த 50 பேருக்கு அனுமதி மறுப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 17, 2019

வங்கித் தேர்வு எழுத வந்த 50 பேருக்கு அனுமதி மறுப்பு

கணினியில் கையெழுத்துப் பதிவு இல்லாததைக் காரணம்காட்டி வங்கித் தேர்வு எழுத வந்த 50 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.



வங்கிகளில் எழுத்தர் மற்றும் புரொபஷனரி அதிகாரி ஆகிய பணியிடங்களுக்கு சனிக்கிழமை தேர்வு நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்டத்தில் திடியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.


 இந்த மையத்தில் தேர்வு எழுதுவதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து ஆண்களும் பெண்களும் சுமார் 700 பேர் தேர்வு மையத்துக்கு உரிய நேரத்திற்கு வந்தனர்.


இதில், 50 பேருக்கு கணினியில் கையெழுத்துப் பதிவு இல்லை எனத் தெரிவித்து தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.தேர்வு மைய பொறுப்பாளரிடம் முறையிட்டும் அனுமதிக்கவில்லையாம்.


இதுகுறித்து தேர்வு எழுத வந்த அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சங்கர் கூறியது:

வங்கித் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தபோது, புகைப்படம், கையெழுத்து, சான்றிதழ் நகல் அனைத்தும் இணைக்கப்பட்டது.
தேர்வு எழுதுவோரின் புகைப்படம், கையெழுத்துடன் அனுமதிச் சீட்டும் வந்தது.


ஆனால், அனுமதிச் சீட்டுடன் தேர்வு எழுத வந்தபோது, மையத்தில் தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட கணினியில் கையெழுத்துப் பதிவு வரவில்லை என தெரிவித்து தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.


தேர்வு மைய பொறுப்பாளரிடம் முறையிட்டதில், மைய நிர்வாகியின் கணினியில் கையெழுத்துப் பதிவு இருந்தது.


ஆனாலும் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட கணினியில் கையெழுத்து வரவில்லை எனத் தெரிவித்து அனுமதிக்கவில்லை.
கையெழுத்துப் பதிவு இல்லாத 50 பேர் தேர்வு எழுத முடியாமல் திரும்பினர் என்றார் அவர்.


இதுகுறித்து தேர்வெழுத வந்தவர்களின் பெற்றோர் சிலர் கூறியது: கணினி முறையில் தேர்வு நடத்தும்போது தேர்வுக்குப் பயன்படுத்தும் கணினிகள் தரமானதா என்பதை பரிசோதனை செய்த பின்னர் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்.


இதுபோன்று தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுவதால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தனர்

No comments:

Post a Comment