தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மதுரை மீனாட்சியம்மன் கோயில் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 9, 2019

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மதுரை மீனாட்சியம்மன் கோயில்

நாட்டின் இரண்டாவது சிறந்த சுகாதாரமான புண்ணிய தலம் விருதை மதுரை மீனாட்சியம்மன் கோவில் பெற்றுள்ளது. மாநகராட்சியின் கடந்த ஒரு ஆண்டு தூய்மைப்பணியால் தமிழகத்திற்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது.

மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தூய்மையான புனித தலங்களை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் மீனாட்சியம்மன் கோயில் உள்பட 10 முக்கிய புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் தூய்மை, சுகாதாரம் கண்காணிக்கப்பட்டது.

தற்போது அந்த பட்டியலில் இடம்பெற்ற கோயில்கள் அதன் தூய்மையின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டதுஅதன் அடிப்படையில் இந்தியாவிலேயே தூய்மையான புனித தலங்கள் தேர்வு செய்து சிறப்பு பரிசுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதில், மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மன் கோயில் பகுதிகளில் மதுரை மாநகராட்சி, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து தூய்மை மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டது.

கோவிலை சுற்றி 25 நவீன மின்னணு கழிப்பறை அமைத்தல், குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது, மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி பிளாஸ்டிக் பைகளை தடைசெய்தல், 24 மணி நேர துப்புரவு பணிக்கு துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்தல், நவீன மண்கூட்டும் இயந்திரம், 63 காம்பேக்டர் பின்கள், 4 மினி காம்பேக்டர் லாரிகள், 15 சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திரம் அமைத்தல், பக்தர்களை அழைத்து செல்வதற்கு வசதியாக 5 நவீன பேட்டரி வாகனங்கள் இயக்குதல், மாநகராட்சி பகுதிகளில் முக்கிய சாலை சந்திப்புகளில் புராதன சின்னங்கள் அமைத்து மேம்படுத்துதல் போன்ற பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக மதுரை மாநகராட்சியின் சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.

இந்த சுகாதார நடவடிக்கையால் மீனாட்சியம்மன் கோவில் இந்தியாவிலேயே 2வது சிறந்த சுகாதாரமான புனித தலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணோ தேவி கோவில் முதல் தூய்மைதேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பு விருதை மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை ஜல் சக்தி அமைச்சகம், புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகனிடம் வழங்கியது. ஜல் சக்தி மத்திய அமைச்சர் ஸ்ரீகஜேந்திரசிங் ஷெகாவத், இணை அமைச்சர் ஸ்ரீரத்தன்லால் கட்டாரியா ஆகியோர் இந்த விருதை வழங்கினர்.

மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் கூறுகையில், ''சுகாதாரத்துறை ஊழியர்கள் உழைப்பிற்கு கிடைத்த பரிசு. விரைவில் தூய்மையான நகரங்கள் பட்டியலிலும் மதுரை முதலிடத்தை பிடிக்கும். அதற்கான சுகாதார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, '' என்றார்.

No comments:

Post a Comment