நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடியில் அதிகாரிகளுக்கும் தொடர்பு? உடனடியாக பட்டியல் வெளியிட உத்தரவு ,..தேசிய அளவில் நடந்திருக்க வாய்ப்பு என ஐகோர்ட் கருத்து - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 4, 2019

நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடியில் அதிகாரிகளுக்கும் தொடர்பு? உடனடியாக பட்டியல் வெளியிட உத்தரவு ,..தேசிய அளவில் நடந்திருக்க வாய்ப்பு என ஐகோர்ட் கருத்து

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


 மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாத என்.ஆர்.ஐ. இடங்களை நிர்வாக ஒதுக்கீடுக்கு கொடுக்காமல் கவுன்சிலிங் மூலம் நிரப்பக்கோரி தீரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், நீட் ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து தமிழக அரசுக்கு, நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு செப்டம்பர் 25ல் கேள்வி எழுப்பியிருந்தது. அதில், நீட் தேர்வில் எத்தனை பேர் ஆள் மாறாட்டம் செய்து அதன்மூலம் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.


 நீட் தேர்வு எழுதியவர்களின் அடையாளம், மாணவர் சேர்க்கை பெற்றவர்களின் அடையாளம் சரிபார்க்கப்பட்டதா? ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி தொடர்பாக வேறு வழக்குகள் கண்டறியபட்டுள்ளதா? அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா?

 தேனி மாணவன் குறித்த விசாரணையின் நிலை என்ன? மோசடி மூலம் மாணவர் சேர்க்கை பெற்றுள்ளார் என்று தெரிந்தும் தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையா?  நீட் தேர்வுக்கு மாணவரை சோதித்து அனுப்பியது முதல் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதா?  இரட்டை இருப்பிடச் சான்று அளித்து மாணவர் சேர்க்கை பெற்றது போல வேறு வகையில் மோசடியாக மாணவர் சேர்க்கை பெற்றுள்ளனரா என காண்டறியப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.



 இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வு கமிட்டி சார்பில் ஆஜரான வக்கீல், அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த 2 மாணவர்களும், நிகர்நிலை  பல்கலைகழகங்களை சேர்ந்த 3 பேரும், இடைதரகராக செயல்பட்ட ஒருவரும் சிபிசிஐடி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

  அரசுத் தரப்பின் பதிலைக் கேட்ட நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: நாடு முழுவதும் 14 லட்சம் பேர் நீட் தேர்வெழுதிய நிலையில், ஒரு இடைத்தரகர் மட்டும்தான் இந்த முறைகேடுகளை செய்துள்ளாரா? அரசு அதிகாரிகளின் துணையில்லாமல் இந்த முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை.

சம்பந்தப்பட்டவர்களை கண்டறிவதில் அரசு விழிப்புடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். இந்த வழக்கில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை, தேசிய தேர்வு ஏஜென்சி, தமிழக சுகாதார துறை, தமிழக டிஜிபி, தமிழக சிபிசிஐடி ஆகியோரையும், கோவை கேஎம்சிஎச் மருத்துவ கல்லூரியையும், மாங்காடு முத்துக்குமரன் மருத்துவ கல்லூரியையும், குன்றத்தூர் மாதா மருத்துவ கல்லூரியையும் தாமாக முன்வந்து இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கிறோம்.
இந்த கல்லூரிகளில் எந்த அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவை குறித்த பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், எத்தனை மாணவர்கள் நீட் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், எவ்வளவு தொகை பரிமாற்றம் நடந்துள்ளது, எந்தெந்த அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரங்களை சிபிசிஐடி அக்டோபர் 15ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.


நீட் ஆள் மாறாட்ட விவகாரத்தில் அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மருத்துவ மோசடியில் சிக்கியுள்ள அதிகாரிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது தமிழக அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அதிகாரிகளின் உதவி இல்லாமல் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க முடியாது.


* நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது.


* பல மாணவர்கள் ஆள்மாறாட்டம், போலி சான்றிதழ் மூலம் சேர்க்கை பெற்றுள்ளதால்  இந்த வழக்கில் மத்திய மனித வள மேம்பாடு அமைச்சகத்தையும், தேசிய தேர்வு  ஏஜென்சியும் சேர்க்க உத்தரவிடப்படுகிறது.

No comments:

Post a Comment