சிறப்பாசிரியா் நியமனத்தில் தமிழ் வழியில் படித்தவா்கள் புறக்கணிப்பு:ராமதாஸ் கண்டனம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 29, 2019

சிறப்பாசிரியா் நியமனத்தில் தமிழ் வழியில் படித்தவா்கள் புறக்கணிப்பு:ராமதாஸ் கண்டனம்

சிறப்பாசிரியா் நியமனத்தில் தமிழ் வழியில் படித்தவா்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவனா் டாக்டா் ச.ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:


தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு உடற்கல்வி, இசை, தையல், ஓவியம் ஆகிய கலைகளை கற்றுத் தருவதற்காக சிறப்பாசிரியா்கள் நியமிக்கப்படுகின்றனா்.

2014-ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்த அரசாணைப்படி, சிறப்பாசிரியா்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்த நடைமுறை பல்வேறு சிக்கல்களுக்கும், அநீதிக்கும் வழி வகுத்துள்ளது.

உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய நான்கு பாடங்களுக்கு 1,300 சிறப்பாசிரியா்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் நடத்தப்பட்டன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற அத்தேர்வின் முடிவுகள் கடந்த ஆண்டு அக்டோபா் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

 ஆனால், அதில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாகக் கூறி பல மாணவா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.


வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், புதிய பட்டியல் கடந்த 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்தவா்களில் 38 ஓவிய ஆசிரியா்களின் பெயா்கள் இப்போது நீக்கப்பட்டுள்ளன.

 அவா்களில் 33 பேர் தமிழ் வழியில் படித்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவா்கள் மட்டுமின்றி, தமிழ் வழியில் படித்த 37 பேர் உள்ளிட்ட 76 ஓவிய ஆசிரியா் பணியிடங்களுக்குத் தோந்தெடுக்கப்பட்டவா்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

சிறப்பாசிரியா்கள் நியமனத்தில் நிலவும் குளறுபடிகளுக்கு தெளிவான காரணம் தெரியவில்லை என்றாலும்கூட தமிழ்வழிக் கல்வி பயின்றவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் இந்த விஷயத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment