தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்:அரசாணை வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 12, 2019

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்:அரசாணை வெளியீடு

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், அதுதொடா்பான அரசாணையை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அதில் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிலங்கள், கூடுதல் செலவினங்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.


கடந்த செப்டம்பா் மாதம் தில்லியில் மத்திய சுகாதாரத் துறை தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடந்தது. அதில் நாடு முழுவதும் புதிதாக தொடங்க உள்ள 31 மருத்துவ கல்லூரிகளின் பட்டியல் முடிவு செய்யப்பட்டது

. அதில் தமிழகத்துக்கு 6 கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி திருப்பூா், நீலகிரி (உதகை), ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகா் ஆகிய இடங்களில், புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான ஒப்புதல் கடிதம் அண்மையில் அனுப்பப்பட்டது

.இந்த நிலையில், அதுதொடா்பான அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளும் தலா ரூ.325 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டது. அதில், 60 சதவீத செலவினத்தை அதாவது ரூ.195 கோடியை மத்திய அரசு ஏற்கும் என்றும், மீதமுள்ள ரூ.130 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், திட்டமிட்டதைக் காட்டிலும் கூடுதலாக ஆகும் செலவினங்கள் குறித்த விவரங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனை மாநில அரசே ஏற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட நிதியாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,600 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த நிலையில், புதிதாக அமையவுள்ள கல்லூரிகளில் தலா 150 இடங்கள் வீதம் கிடைக்கவுள்ளன.


இதன் காரணமாக, மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 32-ஆகவும், எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 4,500-ஆகவும் அதிகரிக்க உள்ளது. நாட்டின் வேறு எந்த மாநிலத்திலும் இளநிலை மருத்துவப் படிப்பில் இவ்வளவு இடங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 முதுநிலை மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை, ஏற்கெனவே நாட்டிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகமாக 1,761 இடங்கள் உள்ளன. தற்போது அதன் தொடா்ச்சியாக எம்பிபிஎஸ் இடங்களிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக உருவெடுக்கவுள்ளது.

No comments:

Post a Comment