அடிக்கடி கிரில்டு சிக்கன் சாப்பிடும் பழக்கமிருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 7, 2019

அடிக்கடி கிரில்டு சிக்கன் சாப்பிடும் பழக்கமிருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

குழந்தைகளுக்கு மட்டுமல்ல இன்று பெரியவர்களுக்கும் கூட பார்பிக்யூ உணவகங்களுக்குச் சென்று சிக்கன், மட்டன் மற்றும் கடல் உணவு வகைகளை ஒரு கை பார்ப்பதென்பது மிகப்பிடித்தமான செயலாக மாறி வருகிறது. பார்பிக்யூவில் முன்கூட்டியே அசைவ உணவு வகைகளை அரை வேக்காட்டில் வேக வைத்து எடுத்துக் கொண்டு அதில் மசாலா தடவி வைத்து விடுவார்கள். 


பிறகு கஸ்டமர்கள் வந்து அமர்ந்ததும் அவர்களுக்கு முன்பாக டேபிளில் இருக்கும் கிரில் அடுப்பில் அந்த அரைவேக்காட்டு உணவு வகைகளை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப மீண்டும் சுட்டு சாப்பிடும் வசதியைச் செய்து தருகிறார்கள். உணவைச் சுட்டு சாப்பிடும் போது அதில் மேற்கொண்டு சேர்த்துக் கொள்ளத் தேவையான சாஸ்கள், சாறுகள், உப்பு, இஞ்சி பேஸ்ட் எல்லாமும் பக்கவாட்டில் வைக்கப்பட்டிருக்கும்.



பிரஸ்ஸால் தொட்டுத் தொட்டு அதை கிரில் அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் அசைவ உணவுகளின் மேல் தடவி நமது சுவை விருப்பங்களுக்கு ஏற்ப உணவில் சுவை கூட்டும் வசதியும் அதில் உண்டு. இவை எல்லாவற்றையும் தாண்டி பார்பிக்யூவில் கஸ்டமர்களை ஈர்க்கும் முக்கியமான விஷயம், அங்கு அசைவம் மற்றும் சைவ உணவு வகைகளில் கிடைக்கும் அதிகமான சாய்ஸ்கள். அத்தனையும் அன்லிமிடெட் என்பது அதன் கூடுதல் சிறப்பு. சாப்பிடத் தனியாக வயிறு வேண்டும் என்பது போலத்தான் இருக்கும் பார்ப்க்யூவின் மெனு கார்டுகள்.இப்படி நம்மை, எதை உண்பது? எதைத் தவிர்ப்பது? 



என்று தெரியாமல் நிலைகுலைய வைக்கும் விதத்திலான இந்த பார்பிக்யூ ஸ்டைல் விருந்தோம்பலை நாம் மாதமொரு முறையோ அல்லது சில மாதங்களுக்கு ஒரு முறையோ மட்டுமே மேற்கொண்டால் அதில் தவறேதும் இல்லை. ஆனால், இன்று மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைகள் தவறாமல் பார்பிக்யூ செல்லக் கூடிய குடும்பங்களும் இருக்கிறார்கள் என்பது கண்கூடு. அவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்ள ஒரு விஷயமுண்டு. இனிமேல் தயவு செய்து உங்கள் பார்பிக்யூ ஆர்வத்தை சற்றுக் குறைத்துக் கொள்ளுங்கள்.


 ஏனெனில், 2009 ஆம் ஆண்டில் வெளிவந்த மருத்துவ ஆய்வு முன்பே சொன்னதை இப்போது மற்றொரு மேலைநாட்டு உணவியல் மருத்துவ ஆய்வொன்று மீண்டும் உறுதி செய்திருக்கிறது.



அதன்படி சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடு படுத்தும் போது அதில் heterocyclic amines (HCAs)எனப்படும் கார்சினோஜன்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்லும் வாய்ப்பிருக்கிறதாம். அதன் காரணமாக கணையப் புற்றுநோய் வர அதிக அளவிலான வாய்ப்புகள் உண்டு என்கிறது அந்த ஆய்வு.


அடிக்கடி பார்பிக்யூ சென்று சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களைப் பயமுறுத்தும் நோக்கில் இதைச் சொல்லவில்லை. பல்லாண்டுகளாக அதிகரித்துக் கொண்டே இருக்கும் கேன்சர் நோயாளிகளிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில் தெரிய வந்த உண்மை இது.



அசைவ உணவு வகைகளைப் பொறுத்தவரை உணவு வேக வைக்கப்படுவது முக்கியமானது தான். ஆனால், அது மீண்டும் மீண்டுமெனத் தொடரும் போது உணவுக்குழாய் கேன்சர், புரோஸ்டேட் கேன்சர் எனப் பல்வேறு விதமான கேன்சர்களைத் தூண்டும் காரணியாக அமைந்து விடுகிறது. ஆகவே, அப்படி அசைவ உணவு வகைகளை மீண்டும், மீண்டும் சூடு படுத்தி உண்ணும் வாய்ப்புகள் அதிகமுள்ள பார்பிக்யூ உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை தவிர்த்து விடுவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

No comments:

Post a Comment