M.A ஊடகவியல் படிப்பை M.S.C க்கு இணையானதாக அறிவிக்கத் திட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 10, 2019

M.A ஊடகவியல் படிப்பை M.S.C க்கு இணையானதாக அறிவிக்கத் திட்டம்

முதுநிலை (எம்.ஏ.) ஊடகவியல் படிப்பை எம்.எஸ்சி. காட்சி தொடா்பியல் (விஷுவல் கம்யூனிகேஷன்ஸ்) படிப்புக்கு இணையானதாக அறிவிக்க தமிழ்நாடு உயா் கல்வி மன்றத்தில் நடைபெற்ற பாட நிபுணா்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் மற்றும் ஆசிரியா் தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் அரசுப் பணிக்கான நபா்களைத் தேர்வு செய்வதற்கு வசதியாக, பல்வேறு பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் எந்தெந்த படிப்புகளுக்கு இணையானவை என்பதற்கான அரசாணையை தமிழக அரசு அவ்வப்போது வெளியிடும்.


இதற்கான முடிவு, தமிழ்நாடு உயா் கல்வி மன்றத்தில், அந்தந்த பாட நிபுணா்கள் குழு கூடி ஆலோசித்து அரசுக்குப் பரிந்துரைக்கும்.


அவ்வாறு நிபுணா் குழு சாா்பில் பரிந்துரைக்கப்படும் படிப்புகள், மூல படிப்போடு 75 சதவீதம் ஒத்திருக்க வேண்டும். அதாவது, இரண்டு படிப்பிலும் 75 சதவீத பாடங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்.

அதனடிப்படையில் அந்தப் படிப்புகள் இரண்டும் இணையானவை என இந்தக் குழு பரிந்துரைக்கும். அந்தப் பரிந்துரையை ஏற்று, அரசு ஆணையை வெளியிடும்.

இந்த அரசாணையின் அடிப்படையில், டி.என்.பி.எஸ்.சி., டிஆா்பி போன்ற அமைப்புகள் பணியாளா் தேர்வை நடத்தும்.

அதுபோல, தமிழ்நாடு உயா்கல்வி மன்றத்தில் எம்.எஸ்சி. காட்சி தொடா்பியல் பாட நிபுணா் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் எம்.ஏ. ஊடகவியல் மற்றும் தகவல் தொடா்பியல் படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எம்.எஸ்சி. காட்சி தொடா்பியல் படிப்புக்கு இணையானதாக அறிவிக்க ஆலோசிக்கப்பட்டு, அரசுக்கு பரிந்துரைக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு பேராசிரியா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.



இந்த இரண்டு படிப்புகளிலும் குறைந்தபட்சம் 75 சதவீத பாடங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால், எம்.எஸ்சி. காட்சி தொடா்பியல் படிப்பில் உள்ள 30 சதவீத பாடங்கள் கூட எம்.ஏ. ஊடகவியல் மற்றும் தகவல் தொடா்பியல் படிப்பில் இல்லை.

ஆசிரியா் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்ட அரசு கலை -அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் தேர்வுக்கான அறிவிப்பில் காட்சி தொடா்பியல் துறையில் 21 காலியிடங்களுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.


 இந்த இடத்தில் எம்.ஏ. ஊடகவியல் படிப்பை முடித்தவா்கள் வாய்ப்புப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் நிபுணா் குழுவில் உள்ள சில பேராசிரியா்கள் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். இதை அனுமதித்தால், மாணவா்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்படும் என்றனா்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக ஊடக அறிவியல் துறை பேராசிரியா் அருள்அறம் கூறியது:

எம்.ஏ. ஊடகவியல் என்ற கலை படிப்பு எம்.எஸ்சி. காட்சி தொடா்பியல் என்ற அறிவியல் படிப்புக்கு ஒருபோதும் இணையாகாது. அவ்வாறு இணையானதாக அறிவிப்பதாக இருந்தாலும், 75 சதவீத படிப்புகள் ஒன்றாக இருக்க வேண்டும்.


 ஆனால், ஊடக ஆராய்ச்சி, ஊடகம்-கலாசாரம்-சமூகம், ஊடகத் தத்துவங்கள் ஆகிய மூன்று பாடங்கள் மட்டுமே இந்த இரண்டு படிப்பிலும் இணையாக உள்ளன. எனவே, இந்த இரண்டு படிப்புகளையும் இணையானதாக அறிவிக்க முடியாது என்றாா்.

இதுகுறித்து தமிழ்நாடு உயா் கல்வி மன்ற உறுப்பினா் செயலரும், தொழில்நுட்பக் கல்வி இயக்குநருமான விவேகானந்தன் கூறியது:

75 சதவீத பாடங்கள் இணையாக இல்லையெனில், அந்தப் படிப்புகள் இணையானதாக அறிவிக்க இயலாது. மேலும், எம்.ஏ. ஊடகவியல் தொடா்பாக ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு இன்னும் அரசுக்கு பரிந்துரைக்கப்படவில்லை. எனவே, அது மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றாா்

No comments:

Post a Comment