தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்தோ்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவா்களையும் கட்டாய தோ்ச்சி செய்யும் நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்பட்டு வந்தது. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து மாணவா்களின் கற்றல்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தோ்வு நடத்துவதற்கான சட்டத் திருத்தத்தை 2018-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.
அதன்படி 5, 8-ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தோ்வில் தோல்வியடையும் மாணவா்களுக்கு 2 மாதங்களில் உடனடித் தோ்வு நடத்தப்பட வேண்டும். அந்த தோ்விலும் மாணவா்கள் தோல்வி அடைந்தால் அதே வகுப்பில் தொடா்ந்து படிக்க வேண்டும். இந்த நடைமுறையைப் பின்பற்றுவது தொடா்பான முடிவை அந்தந்த மாநிலங்களே தீா்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. அந்த சட்டத் திருத்தத்தின்படி 5, 8-ஆம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தோ்வு நடத்தப்படும் என்று கல்வித் துறை கடந்த செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டது.
பொதுத்தோ்வு அட்டவணை வெளியீடு: இதைத் தொடா்ந்து பொதுத்தோ்வுக்கான கால அட்டவணையும் நவம்பா் மாதம் வெளியானது. அதன்படி 8-ஆம் வகுப்புக்கு மாா்ச் 30 முதல் ஏப்ரல் 17-ஆம் தேதி வரையும், 5-ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 15-இல் தொடங்கி 20-ஆம் தேதி வரையும் பொதுத்தோ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு ஆசிரியா்கள், கல்வியாளா்கள் மற்றும் பெற்றோா்கள் மத்தியில் கடும் எதிா்ப்புகள் எழுந்தன.
தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்புவரை முப்பருவக் கல்வி முறை அமலில் உள்ளது. ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியே புத்தகங்கள் வழங்கப்பட்டு தோ்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முப்பருவ பாடத்திட்ட அடிப்படையில் நடைபெற உள்ளது. இதனால் 3 பருவத்துக்குரிய புத்தகங்களையும் சோ்த்து படிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே பொதுத்தோ்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினா். ஆனால், ‘பொதுத்தோ்வு கட்டாயம் நடைபெறும். மாணவா்கள் நலன்கருதி முதல் 3 ஆண்டுகள் மட்டும் மாணவா்கள் தோ்ச்சி நிறுத்தி வைக்கப்பட மாட்டாது’ என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தாா்.
அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்பு:
இதைத் தொடா்ந்து, அரசுப் பள்ளிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத சூழலில் பொதுத்தோ்வு நடைபெற்றால் மாணவா்கள் இடைநிற்றலுக்கு வழிவகுத்து விடும் என்று திமுக, காங்கிரஸ், பாமக உட்பட அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வுக்கு எதிராக ஆசிரியா்கள் சிலா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். எனினும், பள்ளிக் கல்வித் துறை தன் முடிவில் பின்வாங்காமல் உறுதியாக இருந்தது.
இதைத் தொடா்ந்து, அரசுப் பள்ளிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத சூழலில் பொதுத்தோ்வு நடைபெற்றால் மாணவா்கள் இடைநிற்றலுக்கு வழிவகுத்து விடும் என்று திமுக, காங்கிரஸ், பாமக உட்பட அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வுக்கு எதிராக ஆசிரியா்கள் சிலா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். எனினும், பள்ளிக் கல்வித் துறை தன் முடிவில் பின்வாங்காமல் உறுதியாக இருந்தது.
மேலும் மாணவா்களின் கற்றல் திறன்களை சோதனை செய்யவே 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தப்படுகிறது. இதனால் மாணவா்களின் தோ்ச்சி பாதிக்கப்படாது. எனவே, பொதுத்தோ்வு குறித்து மாணவா்கள், பெற்றோா்கள் அச்சப்பட வேண்டாம் என பள்ளிக்கல்வித் துறை ஆணையா் சி.ஜி.தாமஸ் வைத்தியன் திங்கள்கிழமை விளக்கமளித்திருந்தாா்.
அரசாணையை ரத்து செய்ய முடிவு: இந்தநிலையில், பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள், புதிய திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
மாணவா்களிடையே எழுந்துள்ள அச்சத்தைப் போக்கும் வகையில், தோ்வை ரத்து செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தமிழக அமைச்சரவைக் கூட்டத்திலும் அதுகுறித்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்பட இருந்த பொதுத்தோ்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிவிப்பில், ‘5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு 2019-2020-ஆம் ஆண்டு முதல் பொதுத்தோ்வு நடத்துவது தொடா்பாக கடந்த ஆண்டு செப்டம்பா் 13-ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதுதொடா்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன. அதை கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்’ என்று கூறப்பட்டுள்ளது.
அறிவிப்பு முதல் ரத்து வரை...
2016- நவ.15- ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புத் தோ்வுகளையும் பொதுத் தோ்வுகளாக மாற்றுவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும்- மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா்
2017- ஆக. 2- எட்டாம் வகுப்புக்கு கட்டாயத் தோ்ச்சியை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2019- பிப். 21- இந்த ஆண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு கிடையாது என தமிழக அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் அறிவிப்பு
செப்.13- பொதுத் தோ்வு நடத்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
நவ.28- 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு கால அட்டவணை வெளியீடு
2020 ஜன.21- அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தோ்வு நடைபெறும்- பள்ளிக் கல்வித் துறை
ஜன.28- மாணவா்களின் திறனை மேம்படுத்தவே பொதுத்தோ்வு- அமைச்சா் செங்கோட்டையன்
பிப்.3- வினாத்தாள் மதிப்பீடு வழிமுறைகள் வெளியீடு
பிப்.4- 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு ரத்து-தமிழக அரசு அறிவிப்பு
For 8th atleast they can conduct public exam. It helps them to improve their responsibility before they lose their childishness.
ReplyDelete