முறைகேடுகளை களைய முடிவு : டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் அதிரடி மாற்றம் அறிமுகம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, February 16, 2020

முறைகேடுகளை களைய முடிவு : டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் அதிரடி மாற்றம் அறிமுகம்!

 'குரூப் - 4 மற்றும் குரூப் - 2ஏ' தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் அம்பலமானதை தொடர்ந்து, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வு நடைமுறைகளில், அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.


தேர்வு முறைகளில் செய்யப்பட உள்ள சீர்திருத்தங்கள் குறித்து, தேர்வாணைய தலைவர் தலைமையில், நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், ஆறு முக்கிய மாற்றங்கள் செய்வது என, முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பு: குரூப் - 4, குரூப் - 2 ஏ தேர்வுகளுக்கு, தற்போது பொது அறிவுத்தாள் என, ஒரே ஒரு தேர்வு மட்டும் நடந்து வருகிறது. இனி வருங்காலங்களில், இந்த தேர்வுகள், முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வு என, இரு நிலைகளாக நடத்தப்படும்.

தேர்வு எழுதுவோர், இனி காலை, 9:00 மணிக்கே, தேர்வு கூடங்களுக்கு வர வேண்டும். தேர்வு நேரம் காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை; மூன்று மணி நேரம் தேர்வு நடக்கும். காலை, 10:00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வு நேரத்திற்கு பின், விடைத்தாளில் பதிவு செய்ய வேண்டிய விபரங்களுக்காக, 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். காலை மற்றும் மாலை, இரு வேளைகளிலும் தேர்வு இருந்தால், மாலை நடக்க வேண்டிய தேர்வு, மாலை, 3:00 மணிக்கு துவங்கும். இனிமேல், கொள்குறி வகை தேர்வுகளில், அனைத்து கேள்விகளுக்கும், தேர்வர்கள் விடையளிக்க வேண்டும். ஏதேனும் வினாவிற்கு, விடை அளிக்க இயலவில்லை அல்லது விடை தெரியவில்லை என்றால், அதற்கு கூடுதலாக கொடுக்கப்படும், 'இ' என்ற, வட்டத்தை கறுமையாக்க வேண்டும்.

மொத்தம் எத்தனை கேள்விகளுக்கு, ஏ, பி, சி, டி, இ, விடைகளை நிரப்பியுள்ளார் என்ற விபரத்தை, தனியே பதிவு செய்து, அதற்கான உரிய கட்டங்களை நிரப்ப வேண்டும். விடைத்தாளில் பதிவு செய்ய வேண்டிய, கூடுதல் விபரங்களுக்காக, 15 நிமிடங்கள், தேர்வு நேரத்திற்கு பின் வழங்கப்படும்.


எந்தவொரு கேள்விக்கும், ஏ, பி, சி, டி, இ ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை குறிக்க தவறினால், விடைத்தாள் செல்லாததாகி விடும். தேர்வு முடிந்ததும், எந்தவொரு குறிப்பிட்ட நபரின் விடைத்தாளையும் கண்டுபிடிக்க முடியாதவாறு, தேர்வர்கள் விபரம் அடங்கிய பகுதி மற்றும் விடையளிக்கும் பகுதி ஆகிய வற்றை, தேர்வர்கள் முன்னிலையில் தனித்தனியே பிரித்து, தேர்வு அறையிலேயே சீலிடப்படும். சீலிடப்பட்ட உறை மீது, அறையிலிருக்கும் தேர்வர்களில், சிலரிடம் கையெழுத்து பெறப்படும்

தேர்வு எழுதுவோரின் விடைத்தாளை, அடையாளம் காண இயலாத வகையில், விடைத்தாளின் விடையளிக்கும் பகுதியில், தேர்வரின் கையொப்பத்திற்கு பதிலாக, தேர்வரின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும்.

தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களை, பாதுகாப்பான முறையில், தேர்வாணைய அலுவலகத்திற்கு எடுத்து வர, தற்போதுள்ள முறை மாற்றப்படும். புதிதாக, அதிநவீன தொழில்நுட்பமான, ஜி.பி.எஸ்., மற்றும் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த நடவடிக்கைகள் முழுவதையும், நேரலையாக, தேர்வாணைய அலுவலகத்தில், 24 மணி நேரமும் கண்காணிக்க, கட்டுப்பாட்டு அறை துவக்கப் படும். தேர்வாணையத்திற்கும், நேர்மையான முறையில் தேர்வுக்கு தயார்படுத்தி வரும் தேர்வர்களுக்கும் இடையிலான பிணைப்பை உறுதி செய்யவும், தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமைப்படுத்தவும், தேர்வாணைய இணையதளத்தில், சிறப்பு தகவல் தளம், விரைவில் உருவாக்கப்படும்.


தேர்வாணையம் அவ்வப்போது கொண்டு வரும், ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் குறித்த பின்னுாட்டங்களைப் பெறவும், தேர்வர்கள் தங்களுக்கு தெரிய வரும் தகவல்களை, தேர்வாணையத்துடன் பகிர்ந்து கொள்ளவும், இது பயனுள்ளதாக இருக்கும். அவ்வாறு தகவல் அளிக்கும் தேர்வர்களின், ரகசியத் தன்மை காக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment