காவலர் தேர்வுக்கு தடை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு:  - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, February 20, 2020

காவலர் தேர்வுக்கு தடை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு: 


காவலர் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால், தேர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ள


 தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என 8,888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது.



 அதன் அடிப்படையில், எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டு, பிப்ரவரி 2ம் தேதி, தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், வேலூர் மாவட்டத்தில் 1019 பேரும், விழுப்புரத்தில் 763 பேரும் தேர்வானதாகவும், இவர்கள் அனைவரும் ‘சிகரம்’ என்ற பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனவும்,


இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள் எனக் கூறி, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திருவண்ணாமலையை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ‘‘தேர்வில் கலந்து கொண்டவர்கள் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இடஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை. சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்தி வருகின்றன.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு முறைகேடுகளை விட, சீருடை பணியாளர் தேர்வுகளில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘’டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டு விசாரணை நடந்து வருகிறது.

இப்போது, காவலர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகளால் தேர்வாணையங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள். தமிழகத்தில் பிறந்ததை பெருமையாக நாம் கருதுகிறோம். ஆனால் நேர்மை தற்போது குறைந்து விட்டது. தேர்வாணையங்கள் இதுபோன்று செயல்பட்டால், சாமானிய மக்கள் எப்படி அரசு பணிக்கு செல்ல முடியும்


 இப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் எப்படி பணியாற்றுவார்கள்? எத்தனை பேர், இந்த காவலர் வேலைக்காக எத்தனை நாட்கள், தங்களை தயார்படுத்தி இருப்பார்கள். ஆனால், அதிகாரிகள் செய்யும் தவறுகளால், அதுபோன்றவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது. கிராமப்புற மக்கள் அரசு வேலையை மிகப்பெரிய பதவியாக  கருதுகின்றனர்.


 அந்த பதவியை பெற அவர்கள் கடுமையாக உழைக்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசு பணிக்கு நடத்தப்படும் தேர்வு நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கவில்லை என்றால், மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியும், ஏமாற்றமும் ஏற்படும். மனுதாரர்கள் குறிப்பிட்டபடி, வேலூரில் உள்ள ஒரு மையத்தில் இருந்து மட்டும் 1019 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், 69.5 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஒரே மாதிரியான மதிப்பெண் பெற்றிருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது என்று மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், உடல் தகுதி தேர்வில், அவர்களுக்கு ஒரே சீராக உயர அளவு தரப்பட்டுள்ளது. உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே டிஎன்பிஎஸ்சியில் முறைகேடுகள் நடந்துள்ள நிலையில், காவல் பணியிலும் இதுபோன்று நடந்தால், காவல் துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்


. எனவே, இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான ஒட்டு மொத்த தேர்வு நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த வழக்கை வருகிற மார்ச் 5ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அதற்குள் தமிழ்நாடு சீருடைய பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். மேலும், சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த 10 ஆண்டுகளில் நடத்திய இதுபோன்ற தேர்வுகளில் முறைகேடுகள் ஏதாவது நடந்ததா? என்பது குறித்தும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


 நீட் தேர்வில் முறைகேடு நடந்தது. அதைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தேர்விலும் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் பலர் அரசு பதவிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 மேலும் தேடப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், காவலர் தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. அதோடு எஸ்.ஐ. தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதனால் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற தேர்வுகள் குறித்து விரிவான விசாரணையை சிறப்பு அதிகாரிகளை கொண்ட

தனிப் பிரிவு விசாரணை நடத்த வேண்டும் என்று தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.  ஏற்கனவே அரசு தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை.

தேர்வு மையங்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அப்போது தகவல்கள் வெளியாகின. அது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

1 comment:

  1. Right job to the Right people
    Then only our state will become corruption free.its my wish hope it will become true as soon as possible

    ReplyDelete