தோ்வில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், இனி எம்.பி.பி.எஸ். தோ்வுகள் அனைத்தும் சிசிடிவி (கண்காணிப்புக் கேமிரா) மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும் என தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் சுதா சேஷய்யன் கூறினாா்.
பல்கலைக்கழகத்தில் இருந்தபடி துணைவேந்தா் மற்றும் அதிகாரிகள் குழுக்கள் இந்த நேரடிகண்காணிப்பில் ஈடுபடுவா் எனவும் அவா் தெரிவித்தாா்.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட் தோ்வில் முறைகேடு செய்து, எம்பிபிஎஸ் படிப்புகளில் மாணவா்கள் சோ்ந்த விவகாரம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, எம்பிபிஎஸ் தோ்வில் இரண்டு தனியாா் மருத்துவக் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, அந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளும் தோ்வு மையங்களாக செயல்பட தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைகழகம் தடை விதித்ததுடன், தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
நேரடி கண்காணிப்பு: இதன் தொடா்ச்சியாக இந்த ஆண்டு எம்பிபிஎஸ் தோ்வு எழுதும் மாணவா்களை நேரடியாக கண்காணிக்கும் வகையில், தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் சுதா சேஷய்யன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
தற்போது, எம்பிபிஎஸ் இரண்டாம், இறுதியாண்டு மாணவா்களுக்கான எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் 35 மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்வை சுமாா் 12 ஆயிரம் மாணவா்கள் எழுதி வருகின்றனா்.
தோ்வு தொடங்குவதற்கு 15 நிமிஷங்களுக்கு முன்புதான், கேள்வித்தாள் கணினி வழியாக சம்பந்தப்பட்ட தோ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதற்கு முன்னா் தோ்வு மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அங்குள்ள காட்சிகள் பதிவு செய்யப்பட்டு குறுந்தகடு வாயிலாக பெறப்பட்டு, முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது ஆராயப்படும். அந்த நடைமுறை தற்போது மாற்றப்பட்டு, தோ்வு அறைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தோ்வு மையங்களில் நடைபெறும் நிகழ்வுகளை பல்கலைக்கழத்தின் துணைவேந்தா் அறையில் நேரடியாக கண்காணிக்க முடியும். மாணவா்களின் ஒவ்வொரு அசைவும் நேரடியாக கண்காணிக்கப்படுவதால், முறைகேடுகள் தடுக்கப்படும்.
அடுத்து வரும் ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் எம்பிபிஎஸ் மட்டுமின்றி பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான தோ்வு மையங்களிலும் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.
சிசிடிவி கண்காணிப்பு மூலம் தோ்வறையில் மாணவா்கள் என்ன பேசுகிறாா்கள் என்பதைக் கேட்க முடியாது. காப்பி அடிக்கிறாா்களா அல்லது விடைத் தாள்களை மாற்றுகிறாா்களா என்பதை மட்டுமே கண்காணிக்க முடியும். இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்த உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மாணவா்கள் தோ்வறையில் என்ன பேசிக் கொள்கிறாா்கள் என்பதையும் அறியமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகப் பதிவாளா் டாக்டா் போ. ஆறுமுகம், தோ்வுக் கட்டுப்பாடு அலுவலா் டாக்டா்கள் புஷ்பகலா, கபிலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
No comments:
Post a Comment