முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சமூகநீதியில் அக்கறை இல்லை  - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, February 16, 2020

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சமூகநீதியில் அக்கறை இல்லை 

தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் இட ஒதுக்கீடு விதிகள் மீறப்பட்டுள்ளது என்றும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சமூகநீதியில் அக்கறை இல்லை என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


 பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், வேதியியல், தமிழ், பொருளியல், வரலாறு உள்ளிட்ட 7 பாடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிப்பில் இட ஒதுக்கீடு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.



 இதை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்துள்ள நிலையில், அந்த விதிமீறல்களை சரி செய்து சமூகநீதி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யாமல், அவசர, அவசரமாக நியமன ஆணைகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சமூகநீதியில் அக்கறை இருந்திருந்தால், பா.ம.க. சுட்டிக் காட்டியிருந்த குறைகளையும், விதிமீறல்களையும் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும்.

 ஆனால், அதை செய்யாமல் கடந்த 9 மற்றும் 10-ந்தேதிகளில் மாவட்ட அளவில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, சர்ச்சைக்குரிய தமிழ், பொருளியல், அரசியல் அறிவியல், உயிர் வேதியியல் ஆகிய பாடங்களுக்கு இடஒதுக்கீட்டு விதிகளை மீறி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.


வேதியியல் பாடத்தில் 34 பேர், தமிழ் பாடத்தில் 28 பேர், பொருளியலில் 12 பேர், வரலாற்று பாடத்தில் 6 பேர், புவியியல், அரசியல், அறிவியல், உயிரி வேதியியல் பாடங்களில் தலா ஒருவர் என மொத்தம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 83 பேரும், இந்தப் பாடங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த 16 பேரும் ஆசிரியர்களாகும் வாய்ப்பை இழந்துள்ளனர். இது மிகப்பெரிய அநீதி இல்லையா?.


எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் சமூகநீதிக்கு எதிரான போக்கை கைவிட்டு, பாதிக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்க முன்வர வேண்டும். இந்த விஷயத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதலை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-


தேர்வு முறைகேடுகளைத் தடுக்க டி.என்.பி.எஸ்.சி. மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் 4-ம் தொகுதி பணிகளுக்கு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது. இந்த முடிவை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment