I.T ரெய்டு எப்படி திட்டமிடப்படுகிறது? சினிமா ரெய்டு நிஜமா? விரிவான தகவல்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, February 17, 2020

I.T ரெய்டு எப்படி திட்டமிடப்படுகிறது? சினிமா ரெய்டு நிஜமா? விரிவான தகவல்கள்

தொழில் எல்லாம் சுகமே தொடரில், வரி விவரங்கள், வங்கி கடன்கள், அரசின் நிதி மானியம் போன்றவற்றைப் பார்த்து வருகிறோம். கணக்கில் காட்டப்பட்ட பணம், எவ்வளவு முக்கியம் என்பதை வருமானவரி சோதனைக்கு உட்பட்டவர்கள் உணர்வார்கள். அடிக்கடி பரபரப்புக்கு உள்ளாகும் வருமான வரி சோதனை, அதன் விளைவுகள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.





திரைப்பட பிரபலங்கள், பெரிய வணிக நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், பிரபல தொழிலதிபர்களின் வீடுகள், நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை என்ற, 'பிரேக்கிங் நியூஸ்' பார்த்திருக்கக்கூடும். கட்டுக்கட்டாக ஆவணங்கள், கத்தை, கத்தையாக கரன்சிகள், கிலோ கணக்கில் தங்கம் என, 'ஜேம்ஸ் பாண்ட்' கதைபோல அதன் பின்னணி விவரிக்கப்படும். ஆனால், 'ஐ.டி. ரெய்டு'களின்போது உண்மையில் என்ன நடக்கும்?

வரி ஏய்ப்பு சோதனை


பொதுவாக, வரியை குறைக்க, வரி திட்டமிடல், வரி தவிர்த்தல், வரி ஏய்ப்பு என்று மூன்று வகையாக பிரிக்கலாம். இவற்றில் வரி திட்டமிடல் மற்றும் வரி தவிர்த்தல் ஆகியவை தவறு என்று நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக, வரி வட்டி அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், வரி ஏய்ப்பு, சோதனைக்கு உட்படுத்தப்படும். 


இந்த சோதனையின் மூலம் கணக்கில் காட்டப்படாத வருமானமும்,சொத்துக்களும் எப்படி சேர்ந்துள்ளது என்பதைகண்டுபிடிப்பார்கள்.பிரபலங்களின் இடங்களில், வருமான வரி சோதனை நடக்கும்போதெல்லாம் பொதுவாகவே ஒரு குற்றச்சாட்டு எழும். மத்தியில் ஆள்பவர்கள் கை காட்டும் இடங்களில் சோதனை நடக்கிறது என்பார்கள்





. ஆனால், உண்மை நிலை என்னவென்றால், வெறும் புரளி தகவலை வைத்து ரெய்டு நடப்பதில்லை. உரிய ஆவணங்கள், பின்னணி விவரங்கள் பற்றி தீவிரமாக புலனாய்வு செய்த பின்னர்தான், வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுகிறார்கள்.

சினிமா ரெய்டு நிஜமா?


இந்தியாவில் எங்கும், எப்போது வேண்டுமானாலும் சோதனையில் ஈடுபடவருமான வரித்துறை அதிகாரம் படைத்தது. வரி செலுத்தப்பட்ட வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த யாரையும் சோதனை செய்ய முடியும். வருமான வரித்துறை சோதனை என்றாலே திரைப்படங்களில் வருவது போல, வீடு, அலுவலக வாசலில், வரிசையாக கார்களில் வந்து இறங்குவது, அறைகளின் சுவற்றை சுத்தியலால் உடைப்பது, தரைக்கு அடியில் தோண்டி பார்ப்பது, 



பண்ணை வீட்டு பரணிலிருந்து, கட்டுக்கட்டாக பணம், நகை, பத்திரங்கள் எடுப்பது போன்ற ரகம் அல்ல.எந்த சோதனைக்கும் தகுந்த ஆவண தயாரிப்பு, வரி புலனாய்வு, இயக்குனர் முன் ஒப்புதல், சோதனை செய்யப்படும் இடங்களை முன்னரே பார்த்தல் ஆகிய பல நிலைகள் உண்டு. அதை கடந்த பின்னரே குறிப்பிடப்பட்ட அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் அதிகாரிகளால் சோதனை நடத்தப்படுகிறது.

எப்படி நடக்கும் ரெய்டு?

வரி அதிகாரிகள், சோதனைக்கு முன் தங்கள் அடையாள அட்டையை சம்பந்தப்பட்டவர்களிடம் காண்பித்து தங்களை அறிமுகம் செய்து கொள்வார்கள். வந்திருப்பவர்களிடம் சோதனைக்கான உரிய ஆவணம் (வாரண்ட்) உள்ளதா என்பதையும் சோதனைக்கு ஆளானவர்கள் உறுதி செய்து கொள்ளலாம்.





 அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், வருமான வரி துறைக்கு தொடர்பு கொண்டு விசாரிக்க உரிமை உண்டு.சோதனைக்கு உட்பட்ட நபர்கள் தங்களுக்கான உணவு மற்றும் மருத்துவ சேவைகள் பெற உரிமை உண்டு. மேலும், சோதனை நடக்கும் இடத்தில் இருக்கவும், ஆவணங்கள் குறித்த விளக்கம் தரவும் அனுமதிப்படுவர். பள்ளி செல்லும் குழந்தைகளை அவர்களது பாடப்புத்தகங்கள் பைகளை சோதனைக்குப்பின் பள்ளிக்கு அனுப்ப உரிமை உள்ளது. பெண்களிடம், பெண் அதிகாரிகள்தான் சோதனை செய்வார்கள்.

உத்தரவிடுவது யார்?

வருமானவரித்துறை சட்டப்பிரிவு 132, உட்பிரிவு 1ன் படி, முதன்மை கமிஷனர் அந்தஸ்துக்கு இணையான அதிகாரியின் உத்தரவின் பேரில், வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளுவார்கள். வீடு, அலுவலகம், வாகனம் போன்ற எதை வேண்டுமானாலும் சோதனையிட அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. சோதனை முடியும் காலம் வரை தொலைபேசி, மொபைல் என அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களையும் துண்டித்த பின்னரே சோதனையை தொடங்குவார்கள்.

பறிமுதல் கூடாது

பொதுவாக நகைகள், ரொக்கம், பத்திரங்கள், விலையுயர்ந்த பெயிண்டிங் போன்றவை கணக்கில் காட்டப்பட்டுள்ளதா என்று சரி பார்ப்பார்கள். பின்னர் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் பறிமுதல் செய்யப்படும். காட்டப்படாத நகைகளில் 250 கிராம் திருமணமான பெண்ணுக்கும்




 150 கிராம் திருமணமாகாத பெண்ணுக்கும், 100 கிராம் ஆணுக்கும் வைத்திருக்க அனுமதி உள்ளது. பாதுகாப்பு பெட்டகம் அல்லது அறையின் சாவி இல்லை என்று உறுதி செய்யாப்பட்டால் அதனை உடைக்கும் அதிகாரமும் வருமான வரி அதிகாரிகளுக்கு உண்டு. அசையாச் சொத்துக்கள், வியாபாரப் பொருட்கள், கணக்கில் உள்ள சொத்துக்கள், நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ய முடியாது.

நடிகரிடம் ஏன் ரெய்டு


சோதனைக்கு உட்படுத்தப்படும் நபர், கணக்கில் காட்டப்படாத வரவு - செலவு அல்லது சொத்து விவரங்களை மூன்றாம் நபரின் பெயரில் கூறி இருந்தால் அதை உடனடியாக சரிபார்க்கும் உரிமை அதிகாரிகளுக்கு உள்ளது. சமீபத்தில், திரைப்படத்துறை பைனான்சியர் ஒருவரிடம் நடந்த சோதனையின்போது, ஒரு பிரபல நடிகரின் பெயரும் பேசப்பட்டது. அதனால்தான், நடிகரின் வருமானத்தை சரி பார்க்க அவரிடமும் சோதனை நடந்திருக்க வாய்ப்புண்டு. முன்னுக்குப்பின் முரணான தகவல்களை ஊர்ஜிதப்படுத்தும் வகையில்தான் இதுபோன்ற தொடர் சோதனை நடக்குமே தவிர வேறு நோக்கம் இருக்க வாய்ப்பில்லை.


ரெய்டுக்கு உதவும் 360 டிகிரி




வருமானவரி துறை, இப்போது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு வகைகளில் விவரங்கள் சேகரிக்கிறது. உதாரணமாக, '360 டிகிரி விவரம் சேகரித்தல்' என்ற புதிய பாணியில், அனைத்து செலவுகள், முதலீடுகள் ஆகியவை சேகரிக்கப்படுகிறது. வரித் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களுடன் அவை ஒப்பிடப்படுகிறது. கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் அளவுக்குமீறி இருக்கும்போது, உடனுக்குடன் அதுகுறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.




சில ஆண்டுகளுக்குமுன், வருமான வரிச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின் காரணமாக, 'வருமான வரி சோதனை ஏன் நடத்தபடுகிறது?' என்ற விவரத்தை கோர்ட்டுகளுக்குகூட சொல்ல வேண்டியதில்லை. 



சந்தேகத்திற்கு வாய்ப்பு இருந்தால், உடனடியாக சோதனை செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள், அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். வருமான வரித்துறைக்கு வரும் தகவல்கள், பெரும்பாலும் வதந்திகள் மற்றும் மூன்றாம் நபர்கள் தரும் விவரங்கள் மூலமாகவே கிடைக்கின்றன. துல்லியமாக தகவல்கள் அளிப்பவர்களுக்கு, குறிப்பிட்ட தொகை வருமான வரித்துறையினரால் பரிசாகவும் வழங்கப்படுகிறது. தகவல் அளிப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படுகிறது.




தற்போதுள்ள சூழ்நிலையில், கணக்கில் காட்டப்படாத பணம், சொத்துக்கள் எப்போதும் ஆபத்துதான். தகவல் தெரியும் பட்சத்தில், வருமான வரித்துறை எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம்.தொழிலை விரிவுபடுத்த நினைப்போர், தற்போது அறிவித்திருக்கும் குறைந்த வரியை செலுத்தி, தங்களிடம் இருக்கும் சொத்து, ரொக்கம் போன்றவற்றை கணக்கில் காட்டிவிட்டால், இனி வரும் இரவும், பகலும் நிம்மதியே!

Source Dinamalar website

No comments:

Post a Comment