சென்னையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 15 பேர் வீடுகள் அடங்கிய பகுதிகள்: சுற்றியுள்ள 2,500 வீடுகள் கண்காணிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, March 29, 2020

சென்னையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 15 பேர் வீடுகள் அடங்கிய பகுதிகள்: சுற்றியுள்ள 2,500 வீடுகள் கண்காணிப்பு


தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆனது, இதில் சென்னையில் மட்டும் 15 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

 இவர்கள் வசித்த வீடுகளைச் சுற்றியுள்ள 2,500 வீடுகளைத் தொடர்ச்சியாக கண்காணிக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 3 பேர் சிகிச்சையில் குணமடைந்து சென்றுவிட்டனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

50 பேரில் பலர் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள். சிலர் அவர்களது குடும்பத்தார். சிலர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்

இவர்கள் தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களில் கண்டறியப்பட்டவர்கள். இவர்கள் வசிக்கும் பகுதியில் 7 கி.மீ. சுற்றுக்கு வீடுகளை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை முடிவு செய்தது.

சென்னையில் மட்டும் 15 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள 2,500 வீடுகளில் வசிக்கும் மக்களை 28 நாட்கள் கண்காணிக்க முடிவு செய்து அதற்கான பணியும் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்ட 15 நபர்களின் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொற்று பரவாமல் தடுக்க ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 15 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று நோய் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி அண்ணாநகர் மண்டலத்திலுள்ள அரும்பாக்கம் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் 5 நபர்களுக்கும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த 5 நபர்களுக்கும்,

 வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட போரூர் பகுதியில் 2 நபர்களுக்கும், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட சாந்தோம் பகுதி, அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட கோட்டூர்புரம் பகுதி, ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆலந்தூர் பகுதியில் தலா ஒரு நபர் என மொத்தம் 15 நபர்களுக்கு வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த 15 நபர்கள் தற்பொழுது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நபர்களின் வீடுகளைச் சுற்றி உள்ள பகுதிகளில் மற்றவர்களுக்கு தொற்று பராமல் தடுக்கும் வகையில் சுற்றியுள்ள 2,500 வீடுகள் 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அந்த வீடுகளில் நாள்தோறும் மாநகராட்சிப் பணியாளர்களைக் கொண்டு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளும் அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஒவ்வொரு நபர்களின் உடல்நிலை குறித்து நாள்தோறும் கேட்டறிந்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதற்காக மாநகராட்சியின் சார்பில் 15 சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள்  காலை முதல் தொற்று உறுதி செய்யப்பட்ட 15 நபர்களின் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற கரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த அறிகுறிகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


இதற்காக மாநகராட்சியின் சார்பில் 2,500 வீடுகள்தோறும் சென்று ஆய்வு செய்யும் ( DBC ) பணியாளர்கள், 1,500 அங்கன்வாடி பணியாளர்கள், 1,500 ஆசிரியர்கள் மற்றும் 750 சுகாதாரச் செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்தப் பகுதிகளைச் சார்ந்த மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். முக்கியத் தேவைகளை தவிர்த்து வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் பிற பகுதிகளில் 2 நாட்களுக்கு ஒருமுறை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வீடுகள்தோறும் சென்று ஆய்வு செய்யும் ( DBC ) பணியாளர்களை கொண்டு தொடர்ந்து 28 நாட்களுக்கு கரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த அறிகுறிகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இதேபோன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெளிநாடுகளிலிருந்து சென்னை திரும்பிய 20,240 நபர்களில் 19,120 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் இவர்கள் எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்''.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment