மேற்குவங்கத்தில் கரோனோ முன்னெச்சரிக்கையின் ஒருபகுதியாக பணி முடித்து செல்லும் அரசு ஊழியர்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஒரு மணிநேரம் முன்னதாக புறப்பட்டுச் செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
மேற்குவங்க மாநிலத்திலும் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு இன்று ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து கொல்கத்தா திரும்பிய அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் ஒரே நேரத்தில் மக்கள் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்வதை தவிர்க்கும் பொருட்டு அரசு ஊழியர்களுக்கு நாள்தோறும் ஒருமணி நேரம் முன்கூட்டியே அலுவலகங்களில் இருந்து புறப்பட்டுச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இதன் மூலம் மாலை நேரங்களில் பெரும் மக்கள் நெரிசல் குறையும் என அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment