கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் தீவிரமாக செயல்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
தமிழக மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதைத் தடுக்கும் வகையில் இந்த புதிய உத்தரவுகள் மார்ச் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு எடுக்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய நடைமுறைகள்..
1.. பெட்ரோல் பங்குகள்
தமிழகத்தில் இருக்கும் பெட்ரோல் பங்குகள் மார்ச் 29ம் தேதி முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும். அதே சமயம், அரசு வாகனங்கள், அவசர ஊர்திகள் போன்றவற்றுக்கு எரிபொருள் வழங்கும் பெட்ரோல் பங்குகள் முழு நேரமும் செயல்படும்.
2. அத்தியாவசியப் பொருட்களுக்கான கடை
காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் கோயம்பேடு சந்தை உட்பட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும்.
இது தவிர, மருந்து கடைகள், உணவகங்கள் வழக்கம் போல நாள் முழுக்க செயல்படலாம்.
3. உணவகச் செயலிகளுக்கு அனுமதி
ஸ்விக்கி, ஸோமோட்டோ, உபர்ஈட்ஸ் போன்ற உணவுகளை நேரடியாகக் கொண்டு வந்து கொடுக்கும் செயலிகள் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால், இவைகள் காலை 7 - 9.30 மணி வரையும், மதியம் 12 - 2.30 மணி வரையும், மாலை 6 - 9 மணி வரையும் மட்டுமே இயங்க வேண்டும்.
இதுபோன்ற செயலிகள் மூலம் நேரடியாக உணவுகளை வழங்கும் ஊழியர்களை, அந்தந்த நிறுவனங்களே மருத்துவப் பரிசோதனை நடத்தி பணிக்கு அமர்த்த வேண்டும்.
4. இறுதிச் சடங்கு
இறுதிச் சடங்குகளில் 20க்கும் மேற்பட்டவர்கள் கூடக் கூடாது.
5. வெளிமாநில பணியாளர்களுக்கு
சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத வெளிமாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் இருப்பின், அவர்கள் பணியாற்றி வரும் நிறுவனங்களே அவர்கள் இருப்பிடத்தையும், உணவுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
அதேப்போல, அரசு திட்டப் பணிகளில் ஈடுபட்டு, சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் வெளி மாநில பணியாளர்களின் நலனை சென்னை மாநகராட்சி மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
6. வெளிநாட்டில் இருந்து வந்தோர்
பிப்ரவரி 15ம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய அனைவரும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொண்டு, தங்களது இருப்பிடம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
7.கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தைக்கு காய்கறி மற்றும் பழங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணிக்குள் லாரிகள் மூலம் வந்தடையும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். கோயம்பேடு சந்தையின் தூய்மையை உறுதி செய்யும் பணியும் தீவிரப்படுத்தப்படும்.
8 சமைத்த உணவுகள் வேண்டாம்
பொதுமக்கள் தயவுகூர்ந்து சமைத்த உணவுகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும். சென்னை மாநகராட்சி ஆணையத்திடம், உணவு சமைக்கத் தேவையானப் பொருட்களைக் கொடுத்து உதவலாம். அதேப்போல அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் உதவிப் பொருட்களை அளிக்கலாம்.
9. மேலும், கூடுதல் உதவிகளையும், மருத்துவமனை மற்றும் சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த விரும்பும் மருத்துவமனை நிர்வாகங்கள் நேரடியாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment