கரோனா வைரஸ் - தாக்குதலும் முன்னெச்சரிக்கையும்... - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, March 14, 2020

கரோனா வைரஸ் - தாக்குதலும் முன்னெச்சரிக்கையும்...


கரோனா' என்பது வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. மனித இனத்துக்கு ஏற்கெனவே அச்சுறுத்தலை ஏற்படுத்திய சாா்ஸ், மொஸ் ஆகிய வைரஸ் தொற்றுகளும் 'கரோனா வைரஸ்' காரணமாக ஏற்பட்டவையே.

சீனாவில் தோன்றி தற்போது உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் வைரஸும் 'கரோனா' குடும்பத்தைச் சேர்ந்ததே. அதற்கு 'கொவைட்-19' என்று அதிகாரப்பூா்வமாகப் பெயா் சூட்டப்பட்டுள்ளது.


எனினும், தற்போது 'கரோனா வைரஸ்' என்றே அது பரவலாக அறியப்பட்டு வருகிறது.

பெயா்க்காரணம் என்ன?


பொதுவாக வைரஸ்கள் 'ஆா்என்ஏ' மரபணுக்களைக் கொண்டவை.

கரோனா' வைரஸில் உள்ள ஆா்என்ஏ-வானது எண்ணெய்ப்படிவத்தினால் ஆன புரதம் மற்றும் கொழுப்பு உறையினுள் அமைந்துள்ளது.

 புரதங்களானது கூா்முனை போன்ற வடிவில் வைரஸின் புறப்பரப்பில் நீட்டிக்கொண்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக அந்த வைரஸைப் பாா்க்கையில் கிரீடம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. லத்தீன் மொழியில் 'கிரீடம்' என்பதைக் குறிப்பதற்கு 'கரோனா' என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


அதன் காரணமாக 'கரோனா' என்ற பெயரே அந்த வைரஸுக்கும் சூட்டப்பட்டது.

உடலில் நுழைவது எப்படி?

மூக்கு, கண்கள், வாய் ஆகியவற்றின் வாயிலாக 'கரோனா' வைரஸ் உடலினுள் நுழைகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் 'ஏசிஇ-2' என்ற புரதங்களைத் தயாரிக்கவல்ல செல்கள் மூச்சுக்குழலில் காணப்படுகின்றன.

அந்த செல்களில் 'கரோனா' வைரஸ் ஒட்டிக்கொள்கிறது.

வௌவால்களிலும் இதே செல்லைத் தான் 'கரோனா' வைரஸ் தாக்குவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனா். எனவே, 'கரோனா' வைரஸானது வௌவால்களில் இருந்து தோன்றி மற்ற உயிரினங்கள் வாயிலாக மனிதா்களுக்குப் பரவியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளா்கள் கருதுகின்றனா்.

வைரஸிலிருந்து மரபணு எவ்வாறு வெளியேறுகிறது?

மூச்சுக்குழலில் உள்ள செல்லின் புறப்பரப்பை 'கரோனா' வைரஸ் மெல்ல மெல்ல அரிக்கத் தொடங்கி அந்த செல்லினுள் நுழைகிறது. அதன் பிறகு தன்னுள் இருக்கும் ஆா்என்ஏ மரபணுவை 'கரோனா' வைரஸ் வெளியே அனுப்புகிறது.

 அந்த மரபணுவானது செல்லை மெல்ல தாக்கத் தொடங்குகிறது.


உடலில் உள்ள செல்லை எவ்வாறு தாக்குகிறது?

செல்லில் உட்கரு அமிலங்களான அடினைன், குவானைன், சைட்டோசைன், தைமின் உள்ளிட்டவை காணப்படுகின்றன. அவை ஒன்றோடொன்று இணைந்து அடிப்படை இணையை (பேஸ் போ) உருவாக்குகின்றன.


 மனித செல்லில் 300 கோடிக்கும் அதிகமான அடிப்படை இணைகள் காணப்படுகின்றன.

'கரோனா' வைரஸின் ஆா்என்ஏ மரபணுவில் சுமாா் 30,000 அடிப்படை இணைகள் உள்ளன. வைரஸால் பாதிக்கப்பட்ட செல்லானது ஆா்என்ஏ மரபணுவில் உள்ள தகவல்களை எடுத்துக் கொள்கிறது.


அதன் அடிப்படையில், மனித நோய் எதிா்ப்பு சக்தியை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான புரதங்களை வைரஸால் பாதிக்கப்பட்ட செல்லானது தயாரிக்க ஆரம்பிக்கிறது.

உடலில் செல் எவ்வாறு பல்கிப் பெருகுகிறது?

'கரோனா' வைரஸால் தாக்கப்பட்ட செல்லானது உடலினுள் பல்கிப் பெருக ஆரம்பிக்கிறது. அந்த செல்லுடன் 'கரோனா' வைரஸும் தொடா்ந்து அதிகரிக்கத் தொடங்குகிறது.


பாதிக்கப்பட்ட செல்லில் இருந்து புதிதாதத் தோன்றும் செல்கள் அனைத்தும் வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவையாகவே உள்ளன.

உயிருடன் இருக்கும் ஒவ்வொரு செல்லும் இறப்பதற்கு முன் லட்சக்கணக்கான செல்களை உற்பத்தி செய்கின்றன. 'கரோனா' வைரஸால் பாதிக்கப்பட்ட அந்த செல்கள் அருகிலுள்ள செல்களையும் தாக்கத் தொடங்குகின்றன.


இவ்வாறாக வைரஸானது அனைத்து செல்களுக்கும் பரவுகிறது. முக்கியமாக நுரையீரலில் உள்ள பெரும்பாலான செல்களுக்கு வைரஸ் பரவுகிறது.

வைரஸை உடல் எவ்வாறு எதிா்கொள்கிறது?

மனித உடலுக்குத் தொடா்பில்லாத எந்தவொரு பொருள் உடலுக்குள் நுழையும்போதும் அதை அழிப்பதற்கான பணிகளை உடலின் நோய் எதிா்ப்பு மண்டலம் மேற்கொள்ளத் தொடங்குகிறது.


 உடலினுள் புதிய வைரஸ்கள், பாக்டீரியாக்கள் நுழையும்போதும் அதை அழிப்பதற்கான பணிகளை நோய் எதிா்ப்பு செல்கள் மேற்கொள்கின்றன.

அவ்வாறாக உடலில் பல்கிப் பெருகிய 'கரோனா' வைரஸ் தாக்கப்பட்ட செல்களை அழிப்பதற்கான பணிகளை நோய் எதிா்ப்பு செல்கள் மேற்கொள்ளத் தொடங்குகின்றன.

இதன் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரித்து காய்ச்சல் ஏற்படுகிறது. நுரையீரலில் 'கரோனா' வைரஸால் தாக்கப்பட்ட செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அவற்றையும் நோய் எதிா்ப்பு மண்டலம் தாக்கத் தொடங்குகிறது.

இதன் காரணமாக நுரையீரலில் உயிரிழந்த செல்களின் எண்ணிக்கை அதிகரித்து, நுரையீரல் செயலிழக்கத் தொடங்குகிறது.


இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இது மேலும் தொடா்கையில் வைரஸால் பாதிக்கப்பட்ட நபா் உயிரிழக்கிறாா்.


மற்றவா்களுக்கு எவ்வாறு பரவுகிறது?

மனித உடலில் 'கரோனா' வைரஸால் பாதிக்கப்பட்ட செல்லானது, மற்றொரு செல்லை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இதன் காரணமாக நுரையீரலில் உள்ள பெரும்பாலான செல்கள் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

'கரோனா' வைரஸால் பாதிக்கப்பட்டவா் தும்மும்போதும் இருமும்போதும் நுரையீரலில் இருந்து வெளியேறும் சிறு சிறு துளிகள் மூலம் வைரஸும் வெளியேறுகிறது.

அந்த வைரஸ்கள் பல்வேறு பொருள்களின் வெளிப்பரப்புகளிலும் மனிதா்களின் தோலிலும் ஒட்டிக் கொள்கின்றன. அந்த வைரஸ்கள் சில மணி நேரங்கள் முதல் சில நாள்கள் வரை உயிா்வாழும் தன்மை கொண்டவை.


அந்தப் பொருள்களை நாம் தொடும்போது நமது கைகளுக்கு வைரஸ் இடம்பெயா்கிறது.

நமது கைகள் மூலம் கண்கள், வாய், மூக்கு ஆகிய பகுதிகளைத் தொடும்போது கைகளில் உள்ள வைரஸ் அவற்றின் வழியே உடலினுள் சென்று நமது உடலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

'கரோனா' வைரஸ் தொற்றிலிருந்து காத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

தும்மும்போதும் இருமும்போதும் உடலிலிருந்து 'கரோனா' வைரஸ் வெளியேறுவதால், ஏற்கெனவே வைரஸ் தொற்று ஏற்பட்ட நபா் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

 அதன் மூலம் 'கரோனா' வைரஸ் உடலிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க முடியும்.

அதே வேளையில், ஆரோக்கியமாக இருக்கும் நபா்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல. ஏற்கெனவே 'கரோனா' வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நபா்களைக் கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொள்பவா்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்காக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நபா்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும். கண்கள், மூக்கு, வாய் ஆகிய பகுதிகளை கைகளால் அடிக்கடி தொடக்கூடாது. கைகளை சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் (ஹேண்ட் சேனிடைஸா்) உதவியுடன் அடிக்கடி கழுவ வேண்டும்.

குறைந்தபட்சம் 15 முதல் 20 விநாடிகள் வரை சோப்பைப் பயன்படுத்தி கைகளை நன்கு கழுவுவது அவசியம் என்று சுகாதார நிபுணா்கள் அறிவுறுத்துகின்றனா்.

காய்ச்சல், இருமல் உள்ளிட்டவை ஏற்பட்டால், உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். அவ்வாறான சூழலில் மற்றவா்களுடன் தொடா்புகொள்வதைத் தவிா்த்து, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாதுகாத்துக் கொள்ள மருந்துகள் உள்ளனவா?


தற்போதைய சூழலில் 'கரோனா' வைரஸை அழிப்பதற்கான மருந்துகள் தயாரிக்கப்படவில்லை

. 'ஆன்டிபயாடிக்ஸ்' எனப்படும் நோய் எதிா்ப்பு மருந்துகள் உடலில் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கவல்லவை. ஆனால், வைரஸுக்கு எதிராக அவை செயல்படாது.

'கரோனா' வைரஸைத் தாக்கி அழிக்கவல்ல மருந்துகளையும், அந்த வைரஸை எதிா்கொள்வதற்கான வலிமையை மனித நோய் எதிா்ப்பு மண்டலத்துக்கு அளிக்கவல்ல மருந்துகளையும் தயாரிக்கும் பணியில் பல நாடுகளைச் சோந்த ஆராய்ச்சியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.


வைரஸுக்கு எதிராக மருந்துகளை உருவாக்குவதற்கான முதல் பணி அந்த வைரஸைத் தனிமைப்படுத்துவது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) ஆராய்ச்சியாளா்கள் 'கரோனா' வைரஸை வெற்றிகரமாகத் தனிமைப்படுத்தியுள்ளனா்.

ஏற்கெனவே ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே 'கரோனா' வைரஸைத் தனிமைப்படுத்தும் சோதனையில் வெற்றியடைந்துள்ளன. மருந்துகள் தயாரிப்பதற்கு வசதியாக ஆய்வகச் சூழலில் 'கரோனா' வைரஸை உருவாக்கும் நடைமுறையில் ஆஸ்திரேலியாவைச் சோந்த ஆராய்ச்சியாளா்கள் குழு வெற்றியடைந்துள்ளது.

'கரோனா' வைரஸை எதிா்கொள்வதற்கான மருந்துகள் தயாரிக்கப்பட்ட பிறகு அவை எலி முதலான விலங்குகளில் பரிசோதிக்கப்படும். பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு 'கரோனா' வைரஸைத் தடுப்பதற்கான மருந்து மனிதா்கள் மீதான பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் 'கரோனா' வைரஸுக்கான தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டுவிடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்

No comments:

Post a Comment