அரசு உதவிபெறும் பள்ளிகளில் திரிசங்கு நிலையில் ஆங்கில வழி வகுப்புகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, March 14, 2020

அரசு உதவிபெறும் பள்ளிகளில் திரிசங்கு நிலையில் ஆங்கில வழி வகுப்புகள்


தமிழகத்தில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடர்பான அரசாணையை செயல்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் மறுத்து வருவதால் மாணவர் சேர்க்கை திரிசங்கு நிலையில் உள்ளது.


 தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலுகின்ற மாணவ மாணவியரும் தனியார் பள்ளி மாணவ மாணவியரை போன்று மிகச்சிறந்த ஆங்கில அறிவை பெற வேண்டும், ஆங்கில பேச்சு பயிற்சி பெற வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளில் கடந்த 2018ம் ஆண்டு முதல் தமிழ் வழி வகுப்புகளுக்கு இணையாக ஆங்கில வழி வகுப்புகளும் தொடங்கப்பட்டன.


இதனை தொடர்ந்து பெற்றோர் ஆர்வத்துடன் இந்த பள்ளிகளில் மாணவ மாணவியரை சேர்த்தனர். கடந்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் தனியாக மழலையர் வகுப்புகளும் தொடங்கப்பட்டன.

மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் வகுப்புகள் நடைபெற்றன.


 இதற்காக பிரத்யேக ஆசிரியர்களின்றி ஏற்கனவே உள்ள ஆசிரியர்களே ஆங்கில வகுப்புகளையும் எடுக்க தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் 20.7.2018ல் அரசாணை எண்: 148 பிறப்பிக்கப்பட்டது.


அரசு பள்ளிகளில் ஆங்கில வழி இணை பிரிவு அனுமதிப்பது போன்று அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைவு, உபரி ஆசிரியர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவற்றை சீர் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் பல்வேறு மாவட்டங்களில் இந்த அரசாணையை இதுவரை செயல்படுத்தவில்லை.


ஆங்கில வழி பிரிவு வகுப்புகளுக்கு அனுமதி கேட்டால் அனுமதி விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் என்று தொடக்க நிலையில் நிராகரித்து விடுகின்றனர். கோட்டால் மேலிட வாய்மொழி உத்தரவு என்றும் கூறுகின்றனர்.

இதற்காக பள்ளி கல்வி இயக்குநரை பார்த்து கோரிக்கை மனு அளித்தல், கல்வித்துறை ஆணையரை பார்த்து மனு அளித்தல் என்று பல முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.



 இருப்பினும் இதுவரை பலன் கிடைக்கவில்லை. இதில் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை தொடங்கலாம் என்று அரசாணையை வெளியிட்ட அரசே அதனை செயல்படுத்தவில்லை.


 பெரும்பாலான மாவட்டங்களில் இதுதான் நிலை என்றுள்ள போதும் ஒரு சில மாவட்டங்களில் மேல்மட்டம் வரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்பதால் அனுமதி வழங்கப்பட்டதாகவும் ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அரசாணையை பின்பற்றி அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவு மாணவர் சேர்த்தால் அவர்களுக்கு புத்தகம் விநியோகம் செய்தல் தொடர்பாக அனுமதி மறுக்கப்படுகிறது.

இதனால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிப்பு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைதல், அதனால் ஆசிரியர்கள் உபரி எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவையும் ஏற்படுகிறது.


 இந்தநிலையில் தற்போது அதிகாரிகள் கூறுவது ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் இருந்தால்தான் விண்ணப்பத்தையே பரிசீலிப்போம் என்கின்றனர். ஆனால் அரசாணையில் அவ்வாறு ஏதும் குறிப்பிடப்படவில்லை.

 மேலும் வகுப்புக்கு 30 மாணவர்கள் என்பது ஆங்கில வழி பிரிவுக்கு முதலில் அனுமதி வழங்கினால் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த முடியும். எனவே இதில் உரிய தீர்வு காணாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்று ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

தகவல்: தினகரன் இணையதளம்

No comments:

Post a Comment