ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள ஆண்கள், மனைவிகளுக்கு வீட்டு வேலைகள் செய்து கொடுத்து பொழுதை கழிக்கின்றனர். இதனால் இல்லத்தரசிகள் குஷியில் உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஞாயிறன்று அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவை பலர் முறையாக பின் பற்றாத நிலையில், அரசு மற்றும் போலீசாரின் அதிரடி காரணமாக நேற்று முதல் பெரும்பாலானோர் கட்டுப்பாட்டை கடைபிடிக்க தொடங்கி உள்ளனர்.
மருந்தகம், மளிகை, காய்கறி கடைகள் தவிர, சிறியது முதல் பெரியது வரை அனைத்து அரசு, தனியார் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால், 80 சதவீத ஆண்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
தேவையின்றி வெளியே வரக்கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வேறு வழியின்றி அனைவரும் வீடுகளுக்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர்.
எந்நேரமும் வேலை, வேலை என்று அலைந்து கொண்டிருந்த ஆண்களுக்கு திடீரென வீடுகளில் முடங்கி இருப்பது, வித்தியாசமான அனுபவத்தை கொடுத்துள்ளது.
பெரும்பாலான ஆண்கள் பாத்திரம் கழுவுவது, சமையலுக்கு உதவியாக காய்கறி நறுக்கி கொடுப்பது ஆகிய வேலைகளை செய்து பொழுதை கழிக்கின்றனர். இதனால் இல்லத்தரசிகள் செம குஷியில் உள்ளனர்.
இதுபற்றி திருச்சி பீமநகரை சேர்ந்த இல்லத்தரசி சுமதி கூறுகையில், ‘‘எனது கணவர் சமையலறை பக்கமே எட்டிக்கூட பார்க்க மாட்டார். குடிக்கும் தண்ணீரை கூட அவர் இருக்கும் இடத்துக்கு தான் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அப்படி இருந்த அவரே, நேரம் போகாததால், பாத்திரம் கழுவுதல், துணி துவைப்பது ஆகிய வேலைகளை செய்கிறார். மேலும் குழந்தைகளுடன் ஜாலியாக பேசி கேரம் போர்டு விளையாடுகிறார்.
தந்தை வீட்டிலேயே இருப்பது குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’’ என்றார். வீட்டு வேலை செய்தல், டிவி பார்க்கும் நேரம் போக மற்ற நேரங்களில் ஆண், பெண் வித்தியாசமின்றி செல்போன்களில் மூழ்குகின்றனர்.
உறவினர்கள், நண்பர்களிடம் பேசுவது, சமூக வலைதளங்களில் உலா வருவது, கேம்கள் விளையாடுவது என நேரத்தை போக்குகின்றனர். இரண்டு நாள் வீட்டுக்குள் இருந்ததே கண்ணை கட்டுகிறது. 21 நாட்கள் எப்படி இருக்க போகிறோம் என்று ெதரியவில்லை. நாட்டுக்காகவும், வீட்டுக்காகவும் இருந்து தான் ஆக வேண்டும். செல்போன் மட்டும் இல்லனா அவ்வளவுதான் சாமி என செல்போனை பார்த்து கையெடுத்து கும்பிடுகின்றனர் சில ஆண்கள்.
No comments:
Post a Comment