கரோனா வைரஸ் குறித்த கேள்விகள், சந்தேகங்களுக்கான பதில்களை வாட்ஸ் அப் எண் மூலம் மக்கள் எளிதாக தெரிந்துகொள்ளும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலே அதுகுறித்த பல்வேறு வதந்திகளும் சமூக வலைதளங்களில் வலம் வருவதைக் காண முடிகிறது. அந்தத் தகவல்களை உண்மையென நம்பும் சிலர் அவற்றைத் தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்குப் பகிர்கின்றனர்.
இதுபோன்ற தவறான தகவல்களால் மக்களிடையே தேவையில்லாத அச்ச உணர்வும், குழப்பமும் ஏற்படுகிறது.
எனவே, நம்பகமான தகவல்களை மக்கள் எளிதாகத் தெரிந்துகொள்ள தமிழக சுகாதாரத்துறை சார்பில் +91 9035766766 என்ற வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
"TN Corona Helpdesk என இந்த எண்ணை பொதுமக்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்துகொள்ளலாம். பின்னர், அந்த எண்ணுக்கு Hi என டைப் செய்து மெசேஜ் அனுப்பினால் (1) தமிழ் அல்லது (2) ஆங்கிலம் இந்த இரண்டில், ஏதாவது ஒரு மொழியைத் தேர்வு செய்யுமாறு மெசேஜ் வரும். Reply-ல் 1 என டைப் செய்து தமிழைத் தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர், நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் குறித்த கேள்விகள் 1, 2, 3, 4, 5, 6 என வரிசையாக இருக்கும். அதில், நமக்கு என்ன தகவல் வேண்டுமோ அந்தக் கேள்விக்குரிய எண்ணைப் பதிவிட்டால் உடனடியாக பதில் வரும்.
உதாரணமாக, 1 எனப் பதிவிட்டால் கரோனா வைரஸ் தடுப்புக்கான 24 மணிநேரக் கட்டுப்பாட்டு அறை எண்கள், அதிகாரபூர்வ இணையதள விவரம், கரோனா அறிகுறிகள் ஆகியவை வரும்.
2 எனப் பதிவிட்டால் கரோனா குறித்த சந்தேகங்கள், கேள்விகளுக்கு மாவட்ட வாரியாகத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் கிடைக்கும்.
கரோனா அறிகுறி இருந்து சோதனை செய்ய வேண்டுமெனில் 3 எனப் பதிவிடலாம்.
மேலும், வெளிநாடு சென்று வந்தவர்கள், கரோனா வைரஸ் தொற்று உள்ளதாக சந்தேகம் உள்ளவர்கள், நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய அறிக்கையைப் பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது".
இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment