இன்று ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பின் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர, தற்காலிகப் பணி நியமன ஆணை வழங்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 31) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் நேற்றைய தினம் (மார்ச் 30) கலந்தாய்வு செய்த பின்னர், இன்று நான் உயரதிகாரிகளுடன் ஆலோசித்து தமிழ்நாட்டு மக்களின் நன்மை கருதி, கீழ்க்கண்ட உத்தரவினைப் பிறப்பிக்கின்றேன்.
31.3.2020 அன்று ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பின் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர, தற்காலிகப் பணி நியமன ஆணை வழங்கப்படும்.
உலகெங்கும் தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. பொதுநலன் கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்க பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
விழித்திருப்போம், விலகியிருப்போம். வீட்டிலேயே இருப்போம், கரோனாவை வெல்வோம்" எனப் பதிவிட்டுள்ளார்
No comments:
Post a Comment