கரோனா அச்சத்தைப் போலவே சமூக ஊடகங்களில் ஏராளமாகத் தவறான தகவல்களும் பரவிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை எந்த வகையிலும் நிரூபிக்கப்படாதவை. எனவே, மக்கள் இவற்றை நம்பிச் செயல்படுவது எந்த விதத்திலும் நல்லதல்ல.
தகவல்களும் விளக்கமும்:
15 நிமிஷங்களுக்கு ஒரு முறை தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தால் ஒருவேளை தொண்டையில் தங்கியிருக்கக் கூடிய நோய்த் தொற்று, தண்ணீருடன் வயிற்றுக்குள் சென்றுவிடும்.அங்கேயுள்ள அமிலச் சத்து அந்தக் கிருமிகளைக் கொன்றுவிடும் என்று கூறப்படுகிறது.
ஆனால், சுவாசத்தால் பரவக் கூடிய எந்தவொரு நோய்த் தொற்றும் இவ்வாறு அழிந்துவிடும் என்பதற்கு இதுவரையிலும் அறிவியல்ரீதியிலான நிரூபணங்கள் எதுவுமில்லை.
* சூடான உப்புத் தண்ணீரால் வாய் கொப்புளித்தால் கரோனா தொற்றிலிருந்து தப்பிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆனால், உப்புத் தண்ணீருக்கும் சுவாச நோய்த் தொற்றுக்கும் சம்பந்தமில்லை. இதுதொடர்பாக, எவ்விதத் தரவுகளும் இல்லை. சிலர் சொல்வதைப் போல எத்தனால் போன்றவற்றைக் கலந்து கொப்புளிப்பது மேலும் ஆபத்தானது.
சுடுதண்ணீர் குடிப்பதால் அல்லது ஐஸ் கிரீமைத் தவிர்ப்பதால் தப்பிக்கலாம் என்பதும் தவறு. சூடான அல்லது குளிர்ச்சியான வெப்பநிலை தொற்றைக் கொன்றுவிடும் என்பதும் சரியல்ல.
* நல்ல வெப்ப நிலையில் அல்லது உஷ்ணமான சூழலில் நோய்த் தொற்று உயிருடன் இருக்காது, அழிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
ஆனால், மிகக் குறைந்த அளவிலேயே கரோனா வைரஸ் பற்றி ஆய்வுகள் நடந்துள்ள நிலையில் வெப்பமான நிலையில் கரோனா கிருமி எவ்வாறு செயல்படும் என்பது பற்றி வல்லுநர்களால் உறுதியாகக் கூற முடியவில்லை.
சார்ஸ் போன்ற நோய்த் தொற்றுகள் வெப்பத்தில் பரவவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு ஊகிக்கப்படுகின்றன. வெப்ப நாடுகளான சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்றவற்றிலும் கரோனா பாதித்துள்ளது குறிப்பிடத் தக்கது
* வெள்ளைப்பூண்டைத் தின்றால் கரோனா வருவதைத் தடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆனால், வெள்ளைப்பூண்டுக்கு சில எதிர்ப்பு சக்தி இருக்கலாம். எனினும், கரோனா வைரஸுக்கு எதிராகப் பூண்டுச் சத்து செயல்படுவதாக எவ்வித சான்றுகளும் இல்லை. மேலும், குறிப்பிட்ட உணவு வகைகளைச் சாப்பிடுவதால் கரோனாவிலிருந்து தப்பிக்கலாம் என்பதற்கும் சான்றுகள் இல்லை.
* தடுப்பு ஊசி மருந்து கிடைக்கிறது, அல்லது இன்னும் சில மாதங்களில் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.
ஆனால், கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு மருந்துக்கான முயற்சிகள் நடைபெற்றுவந்தபோதிலும் மக்களை வணிக ரீதியில் அந்த மருந்து வந்தடைய நீண்ட காலமாகும்.
விலங்குகளுக்குச் செலுத்தி சிலர் பரிசோதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டாலும் அதற்கும் நீண்ட காலமாகும், தவிர, பக்க விளைவுகள் பற்றியெல்லாம் உறுதி செய்யப்பட வேண்டும். ஓராண்டுக்குள் மருந்து கிடைத்தால் அதுவே பெரிய விஷயம்.
* ஃப்ளூ காய்ச்சலைவிட மிகவும் ஆபத்தானது அல்ல கரோனா நோய்த் தொற்று என்று கூறப்படுகிறது.
ஆனால், பெரும்பாலான கரோனா வைரஸ் நோய்ப் பாதிப்பு குறைவாக இருந்தாலும், ஃப்ளூ காய்ச்சலைவிடப் பெரிதாக வேறு அறிகுறிகள் தெரியாவிட்டாலும், இதன் இறப்பு விகிதம் அதிகம், அதாவது ஒரு சதவிகிதம். ஃப்ளூவைப் போல பத்து மடங்கு ஆபத்தானது கரோனா.
* பத்து வினாடிகள் மூச்சுவிடாமல் உங்களால் இருக்க முடிந்தால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் என்று கூறப்படுகிறது.
ஆனால், பத்து வினாடிகள் மூச்சை நிறுத்தி, இருமலின்றி, திணறலின்றி இருக்க முடிந்தால், ஆல் ரைட், உங்களுக்கு நுரையீரல் தொற்று இல்லை என்பது தவறு. ஆழமாக மூச்சிழுக்கும்போது இருமல் வருவதற்கு வேறுபல காரணங்கள் இருக்கலாம். மேலும், பத்து வினாடிகள் மூச்சை நிறுத்த முடிந்தால் கரோனா இல்லை என்று கூறுவதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.
* கரோனா தடுப்பிலிருந்து முகக் கவசம் காப்பாற்றாது என்று கூறப்படுகிறது
முகக் கவசம் கரோனா தொற்றிலிருந்து நூறு சதவிகிதம் தடுத்துவிடும் என்று கூற முடியாது. ஏனென்றால் கண்கள் வழியாகக்கூட இந்த கிருமியால் உடலில் நுழைய முடியும், முகக் கவசத்தைத் தாண்டியும் சிறுசிறு கூறுகள், வாய் அல்லது மூக்கை எட்டிவிட முடியும்.
ஆனால், உறுதியாக, அதிக அளவில் பரவுவதற்குக் காரணமான இருமல் அல்லது தும்மல்களால் நேரிடும் நீர்ச் சிதறல்கள் உள்ளே செல்லாமல் முகக் கவசம் தடுத்துவிடும். பாதிக்கப்பட்டவர்கள் முகக் கவசங்களை அணிவதன் மூலம் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும்.
மற்றபடி பொது இடங்களுக்குச் செல்லும்போது அல்லது பேருந்துகளில் பயணம் செய்யும்போது முகக் கவசம் அணிந்துகொள்வதால் பெரிய பயன் என்று கூறிவிட முடியாது. எனினும், மருத்துவப் பணியாளர்களுக்கு என் 95 போன்ற உயர்தர முகக் கவசங்கள் அவசியம்.
எனவே, உறுதி செய்யப்படாத தகவல்களை நம்பி, கவனக் குறைவாக இருந்து, துன்பங்களை வருவித்துக் கொள்ளாமல் இயன்றவரை எச்சரிக்கையாக இருந்து தற்காத்துக் கொள்வோம்.
SOURCE: DINAMANI WEBSITE
No comments:
Post a Comment