வாடகை கேட்கக்கூடாது ; காலி செய்ய வற்புறுத்தக்கூடாது: வீட்டின் உரிமையாளர்களுக்கு D.I.G எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 30, 2020

வாடகை கேட்கக்கூடாது ; காலி செய்ய வற்புறுத்தக்கூடாது: வீட்டின் உரிமையாளர்களுக்கு D.I.G எச்சரிக்கை


திருச்சி சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் வாடகைக்கு குடியிருந்து வரும் மாணவர்களையோ, தொழிலாளர்களையோ காலி செய்யும்படி வற்புறுத்தினால் வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்ட செய்திக்குறிப்பு:


இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகமானது கரோனா நோய்தொற்று பரவாமல் தடுப்பதற்காக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டி மார்ச் 25-ம் தேதி முதல் 21 நாள்களுக்கு மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளின்றி வேறு எந்த காரணத்துக்காகவும், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று நாடு தழுவிய முழு அடைப்பை கடந்த 24-ம் தேதி பிறப்பித்த அரசாணையில் தெரிவித்துள்ளது.

முழுமையாக முழு அடைப்பை அமல்படுத்துவற்காகவும், வெளிமாநில தொழிலாளர்கள் இடம்பெயராமல் ஒரே இடத்தில் இருப்பதற்கும் இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இதன்படி திருச்சி சரகத்துக்குட்ட திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள், வெளி மாநில கூலித் தொழிலாளர்கள் அனைவரும் தங்குவதற்கு தேவையான தற்காலிக முகாம்கள் மற்றும் உணவு ஆகியவற்றை அளிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


வெளிமாநிலங்களுக்கு பணி நிமித்தமாக சென்று அரசின் ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது தங்களுடைய சொந்த கிராமம் மற்றும் ஊர்களுக்கு வந்துள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்படவும், இந்திய அரசின் சுகாதாரதுறை வகுத்துள்ள வழிகாட்டுதல் விதிமுறைப்படி அத்தகைய தொழிலாளர்கள் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு முறையாக கண்காணிக்கப்பட வேண்டும்.

அரசின் ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிகின்ற அனைத்து தொழிலாளர்களுக்கும், அவர்களுடைய மாத ஊதியத்தை எந்த வித பிடித்தமும் இன்றி ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள பணி நாள்களுக்கும் சேர்த்து கணக்கிட்டு முழுமையாக வழங்க வேண்டும்.

தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் பணியின் காரணமாக தாங்கள் வேலை செய்யும் இடங்களில், வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் பட்சத்தில் அவர்களிடமிருந்து வீட்டு வாடகையை அடுத்த ஒரு மாதத்திற்கு கேட்டு வசூல் செய்யக்கூடாது என்று சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறது.

எந்த தனியார் இடத்தின் உரிமையாளரும் தங்களுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு குடியிருந்து வரும் மாணவர்களையோ, தொழிலாளர்களையோ காலி செய்யும்படி வற்புறுத்தினால் அவர்கள் மீது உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.


மேலும் திருச்சி சரகத்துக்குட்பட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சிறப்பு காவல் கட்டுபாட்டு அறை எண் திருச்சி 0431-2333638, புதுக்கோட்டை 04322-266966, கரூர் 04324- 255100, பெரம்பலூர் 04328 - 224962, அரியலூர் 04329 - 222216 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment