ஊரடங்கை சீர் படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் டில்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிளின் 8 வயது மகள், தங்களை நினைத்து பெருமையடைவதாக குறிப்பிட்டு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். சிலர் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதால் அவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்
. இரவு-பகல் பாராமல் ஊரடங்கை சீர் படுத்திவருகின்றனர். இந்நிலையில், டில்லி போலீசில் தலைமை கான்ஸ்டபிளாக உள்ள அனில்குமார் டாக்கா என்பவருக்கு அவரது மகள் விதி டாக்கா (வயது 8) உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.4ம் வகுப்பு படிக்கும் அவர் எழுதிய கடிதத்தில், நீங்கள் இரவில் தூங்குவதில்லை.
நீங்கள் உங்கள் வீட்டிற்கு தாமதமாக வருகிறீர்கள் அல்லது சில சமயங்களில் வீட்டிற்கே வரமாட்டீர்கள். தங்களது சொந்த வாழ்க்கையை பற்றி சிந்திக்காமல் அனைவரையும் கவனித்துக்கொண்டதற்காக, அனில்குமார் டாக்காவின் மகளான நான், உங்களுக்கும் உங்களுடன் பணிபுரிபவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், என எழுதியிருந்தார்.
இது குறித்து ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு விதி டாக்கா அளித்த பேட்டி: கடிதத்தை நான் தான் எழுதினேன். ஏனெனில் கடந்த சில நாட்களாக நான் எழும்போதெல்லாம் என் அப்பாவை வீட்டில் பார்க்கவில்லை.
எனது அப்பா மற்றும் அனைத்து போலீசாரையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஆனால் அவர்களுக்கு நோய் தாக்கிவிடும் என பயப்படுகிறேன். எனவே, அவருக்கும் மற்ற அனைத்து போலீசாருக்கும், கடினமாக உழைக்கும் மருத்துவர்களுக்கும் இந்த கடிதத்தை எழுதினேன். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment