பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எத்தகைய சிறப்பு வகுப்புகள் தேவை? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 21, 2020

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எத்தகைய சிறப்பு வகுப்புகள் தேவை?

கரோனா நோய்த்தொற்று எதிரொலியாக நாடு முழுவதும் மே 3-ம் தேதிவரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்குவதாக இருந்தது.


ஆனால், ஊரடங்கின் காரணமாக பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு தள்ளிப்போடப்பட்டது. இந்நிலையில் மே மாதத்தில் தேர்வு நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு மையங்கள், தேர்வறைகள், கேள்வித்தாள் தயாரித்தல் உள்ளிட்ட பல செயல்பாடுகள் இதனுடன் தொடர்புடையவை.

மறுபுறம் தேர்வை எழுதவிருக்கும் மாணவர்கள் ஏற்கெனவே தேர்வுக்குத் தயாராகி இருந்தாலும் எதிர்பாராமல் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டது, இயல்புநிலை பாதிக்கப்பட்டிருப்பது, கரோனா நோய்த் தொற்று, கரோனா குறித்த அச்சம் ஆகியவை இடையூறுகளாக எழுந்துள்ளன.

ஆகையால், ஊரடங்கு விலக்கப்பட்ட பிறகு தேர்வு நடத்துவதற்கு முன்னதாக மாணவர்களுக்குக் கடைசி நேரத் திருப்புதல் வழங்கப் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுக்குச் சிறப்பாகத் தயாராகத் தமிழக கல்வித் துறையின் கல்வித் தொலைக்காட்சியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


 இணையத்தில் யூடியூப் மூலமாகவும் பாடங்களில் கடைசி நேரத் திருப்புதல் மேற்கொள்ள நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 15 முதல் டிடி பொதிகை சேனலில் தினமும் காலை 10 முதல் 11 மணி வரை பத்தாம் வகுப்பு பாடங்களை ஆசிரிய வல்லுநர்கள் எடுத்துவருகிறார்க்ள்.

முக்கியத் தலைப்புகளில் திருப்புதல்


இது தொடர்பாகக் கல்வித் தொலைக்காட்சிப் பொறுப்பாளரிடம் கேட்டபோது, "பத்தாம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களின் முக்கியப் பகுதிகளைக் கற்பித்து வருகிறோம்.

ஒரு பாடத்துக்கு அரை மணிநேரம் வீதம் காலை 6 மணி தொடங்கி இரவு 12 மணிவரை ஒவ்வொரு பாடத்துக்கான காணொலிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. மொத்தம் 200 எபிசோட்கள் தயாரித்துள்ளோம்.

 எங்களிடம் இருந்து பாடத்துக்கான காணொலிகளைப் பெற்று 'காண்போம் கற்போம்' என்ற நிகழ்ச்சியைப் பொதிகை தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பி வருகிறது. இதுதவிர சில தனியார் தொலைக்காட்சிகளும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றன.

தற்போது தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்காக மட்டுமே சிறப்புப் பாட வகுப்புகளைத் தயாரித்துள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் ஆங்கிலத்திலும் வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்


. மாதிரி வினாத்தாளைத் தயாரித்துச் சிறப்பு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம். தொலைக்காட்சி அலைவரிசைகள் தவிர kalvitv.official யூடியூப் சேனலில் 24 மணிநேரம் பாடத்துக்கான காணொலிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. தற்போது வரை 17 ஆயிரம் சந்தாதாரர்களும் 2 லட்சம் பார்வையாளர்களும் கல்வித் தொலைக்காட்சிக்கு கிடைத்திருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.


பள்ளியில் சிறப்பு வகுப்பு தேவை


வீட்டில் இருக்கும் மாணவர்களை இணையம், தொலைக்காட்சி வழியாக பொதுத் தேர்வுக்குத் தயார்படுத்தும் முயற்சி வரவேற்புக்குரியது. என்றாலும் வாழ்வாதாரமற்ற மக்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் படித்துவருகிறார்கள்.

அவர்களையும் மனத்தில் நிறுத்தி கூடுதல் பொறுப்புடன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்காக ஏற்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்கிறார் கல்விச் செயற்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

"தமிழகத்தைப் பொறுத்தவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவிருக்கிறார்கள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிச்சயமாக நடத்தப்பட வேண்டும்.

 ஏனென்றால் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத பொருளாதார சூழலில்தான் இன்றும் பலர் இருக்கிறார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு இந்தச் சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே அவர்களால் அந்தப் படிப்புக்குரிய வேலையாவது பெற முடியும்.

 இவ்விரு விஷயங்களையும் கவனத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகளைப் பள்ளிக்கூடங்களில் நடத்த வேண்டும்.


அதன் பிறகே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஐந்து பாடங்கள்தான் என்பதால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேர்வு வைத்துக்கூட பத்து நாட்களில் தேர்வுகளை நடத்திவிடலாம்.

பிறகு விடைத்தாள் திருத்தும் பணியை அடுத்த பத்து நாட்களில் முடித்துவிடலாம். அதேபோன்று சமூக இடைவெளி மட்டுமே நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருப்பதால் 10 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யும் பணியில் கூடுதல் அக்கறை தேவைப்படுகிறது.

சிறப்பு வகுப்புகளை மாணவர்களுக்குப் பள்ளி வளாகத்தில் நடத்தும் அந்த பதினைந்து நாட்கள் கால அவகாசத்தில் இதற்கான ஏற்பாடுகளையும் கல்வித் துறை செய்திட வேண்டும்" என்றார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

No comments:

Post a Comment