டியூஷன் போவதை தடுக்குமா அரசு? புத்தகங்களை சுமக்கும் குழந்தைகள் கொரோனாவை சுமக்கக்கூடிய அபாயம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 27, 2020

டியூஷன் போவதை தடுக்குமா அரசு? புத்தகங்களை சுமக்கும் குழந்தைகள் கொரோனாவை சுமக்கக்கூடிய அபாயம்

கேரளாவை போல் நடவடிக்கை : சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும், மாணவர்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், சில இடங்களில் டியூஷன் சென்டர்கள் செயல்படத் தொடங்கி உள்ளன. 

இதனால் மாணவர்களுக்கு கொரோனா தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு நல்ல பள்ளியில் பெற்றோர் போராடி அட்மிஷன் வாங்குகின்றனர். இருப்பினும், வகுப்பில் கற்பது மட்டுமே போதுமானதாக இல்லை. 


படிப்பில் அதிக மார்க் வாங்குவது மட்டுமின்றி, நுழைவுத் தேர்வு உட்பட பல்வேறு தனித் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் மாணவர்கள் டியூஷன் செல்கின்றனர். குடும்ப வருமானம் போதவில்லை என்றாலும், குழந்தைகள் சிறப்பாக படிக்க வேண்டும் என்பதே பெற்றோரின் குறிக்கோளாக உள்ளது.

எனவேதான், டியூஷன் செலவைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. டியூஷன் தொடர்பாக தேசிய அளவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இந்தியாவில் சராசரியாக 4ல் ஒரு குழந்தை டியூஷனுக்கு செல்வது தெரிய வந்துள்ளது. அதாவது, 26 சதவீதம் பேர் டியூஷனுக்கு செல்கின்றனர்.


 சில மாநிலங்களில் இது 75 சதவீதமாக உள்ளது. அதாவது, 4ல் 3 பேர் டியூஷன் போகின்றனர். தொடக்கப்பள்ளி அளவில் ஆயிரம் மாணவர்களுக்கு 432 பேர் டியூஷன் செல்கின்றனர். இவர்களில் மாணவர்கள் 231 பேர், மாணவிகள் 201 பேர். 

இதுபோல் ஆயிரம் மாணவர்களுக்கு நடுநிலை பள்ளிகளில் 526 பேர் டியூஷன் செல்கின்றனர். இவர்களில் மாணவர்கள் 280, மாணவிகள் 246 பேர்., உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 725 பேர் டியூஷன் செல்கின்றனர். இவர்களில் மாணவர்கள் 378, மாணவிகள் 347 பேர் என தெரிய வந்துள்ளது.

குடும்பத்தின் மொத்த வருமானத்தில் சுமார் 12 சதவீதம் டியூஷனுக்கு சென்றுவிடுகிறது என பெற்றோர் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். பணக்காரர்கள் மட்டுமின்றி, நடுத்தர மற்றும் ஏழை குழந்தைகளும் கூட தனியார் டியூஷனுக்கு செல்கின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் மாணவர்களுக்கு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இதனால், தேர்வை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்தும் வகையில் சில தனியார் டியூஷன் சென்டர்கள் இயங்க தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.


 குறிப்பாக புரசைவாக்கம், சூளை, அண்ணாநகர், தி.நகர், முகப்பேர், மயிலாப்பூர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் மறைமுகமாக டியூஷன் சென்டர்கள் இயங்க தொடங்கி விட்டன. சில டியூஷன் சென்டர்களில் ஆண்டுகட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்த சூழ்நிலையில், டியூஷன் சென்டர்கள் இயக்க தொடங்குவது, பரவல் மிகவும் தீவிரம் ஆவதற்கு வழிவகுக்கும். அதோடு, சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் கூட டியூஷன் சென்டர்களுக்கு நேரடியாக வர வாய்ப்புகள் உள்ளன. 

இதனால், புத்தகத்தை சுமக்கும் குழந்தைகள் கொரோனாவை சுமந்து பரப்பும் அபாயம் உள்ளது. பொதுத்தேர்வு உள்ள வகுப்புகளுக்கான மாணவர்கள் மட்டுமே டியூஷனுக்கு வந்து சென்றாலும் ஆபத்துதான்.

தமிழகத்தில் பள்ளிகளை ஆகஸ்டில் திறக்கவும், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவும் அரசு பரிசீலனை செய்து வருகிறது. கேரளாவில் ஆன்லைனில் அல்லாமல், நேரடியாக டியூஷன்  சென்டர்களை நடத்தக்கூடாது என, அந்த மாநில முதல்வர் பினராய் விஜயன் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.


 இதுபோல், குழந்தைகள் நலனை மனதில் கொண்டு, கொரோனா தடை காலத்திலும் விதிமுறைகளை மீறி நேரடியாக செயல்படும் டியூஷன் சென்டர்களுக்கு கேரளாவை போல் தனியாக தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தேர்ச்சி இல்லையா? தகுதியும் இல்லையா?

ஒரு காலத்தில் ஆசிரியர் வேலைக்கு செல்வதற்கு  பள்ளிப்படிப்பே போதுமானதாக இருந்தது. பின்னர், டிகிரி படிப்பும், கூடவே ஒரு டீச்சிங் கோர்சும் இருந்தால் போதும்.


 ஆனால், காலப்போக்கில் ஆசிரியர் தேர்வு முறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆசிரியர் தகுதித்தேர்வு வந்த பிறகு நிலைமையே தலைகீழ் ஆகிவிட்டது.  

கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியராக பணியாற்ற, ஆசிரியர் தகுதித்தேர்வில் (டிஇடி) தேர்ச்சி பெற வேண்டும் என்பது  கட்டாயமாக உள்ளது.


இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர்.  முதல் தாள் தேர்வை 1,62,314 பேரும், 2ம் தாள் தேர்வை 3,79,733 பேரும் எழுதினர். ஆனால், ஒரு சதவீதம் பேர்தான் தேர்ச்சி பெற்றனர். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீட்டு டியூஷன் தேவை கவனம்

ஏதோ ஒரு டிகிரி படித்து விட்டு வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் ஆசிரியர்கள், பட்டதாரிகள் பலர் தனியாக டியூஷன் சென்டர்கள் நடத்தாவிட்டாலும், வீட்டிலேயே காலை, மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் நடத்துகின்றனர்.

 கொரோனா பரவலை தடுக்க டியூஷன் சென்டர்களுக்கு தடைவிதித்தாலும், வீடுகளில் நடத்தப்படும் டியூஷன் சென்டர்களுக்கு குழந்தைகள் வருவதை தடுக்க முடியாது. இதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


பெரும்பாலான தனியார் பள்ளிகள், பெற்றோரைத்தான் பகுதி நேர கற்பித்தலுக்கு நம்பியுள்ளன. அதாவது, வீடுகளில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பாடங்களை சொல்லித்தர வேண்டும். இதனால்தான், சேர்க்கையின்போதே பெற்றோர் என்ன படித்திருக்கின்றனர் என்பதில் பள்ளிகள் அதிக கவனம் செலுத்துகின்றன. 

அதோடு, பல பள்ளிகளில் மாணவர்களுக்கு டியூஷன் கட்டாயமாக உள்ளது. வீடுகளில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர முடியாத பட்சத்தில், டியூஷனுக்கு அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களால், பள்ளிகளில் கற்பித்தல் தரம் சரியில்லையா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

வேலையின்மையால் முளைத்த சென்டர்கள்

வேலையில்லா திண்டாட்டமும் டியூஷன் சென்டர்கள் பெருக முக்கிய காரணமாக உள்ளது. படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேர் பட்டதாரிகளாக கல்லூரிகளில் இருந்து வெளியே வருகின்றனர்.  எனவே, வேலையில்லாத பட்டதாரிகள், ஆசிரியர் பயிற்சி முடித்து காத்திருப்பவர்கள், அரசு போட்டி தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்  கூட டியூஷன் சென்டர் துவக்கியுள்ளனர்.


டாப் 5 மாநிலங்கள்

(டியூஷன் செல்லும்  ஆரம்பப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை சதவீதத்தில்)
திரிபுரா                      78.3%
மேற்கு வங்கம்    71.1%
பீகார்                     46.8%
ஒடிசா                     45%
மணிப்பூர்                      34.4%

(டியூஷன் செல்லும் நடுநிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை சதவீதத்தில்)
மேற்கு வங்கம்    89%
திரிபுரா                      87%
பீகார்                     67.2%
ஒடிசா                     63.4%
மணிப்பூர்                     54.7%

1 comment: