ஊரடங்கின் 5 மாதங்களுக்கு பிறகு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று முதல் எல்கேஜி, 1, 6, 9 ஆகிய வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. ஊரடங்கு அமலில் உள்ளதால், மாணவரை சேர்த்துவிட்டு, பின்னர் தேவையான சான்றிதழ்களை பெற்று கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக 1 முதல் 10ம் வகுப்பு வரை ஆல்பாஸ் போடப்பட்டுள்ளது. 10, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் புதிதாக மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும் என பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்தவேளையில், அரசு பள்ளிகளில் எல்கேஜி, 1, 6, 9ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நேற்று முதலும், 24ம் தேதியில் இருந்து மேல்நிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க அரசு, தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதையொட்டி, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிக அளவில் நடந்தது.
இதற்கிடையில், கொரோன தடுப்பு நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால், கூலித் தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், சிறு வியாபாரிகள், சிறுதொழில் செய்வோர் என அனைத்து தரப்பினரும் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர். ஆனால் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்கு தனியார் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment