புதிய தேசிய கல்விக் கொள்கை: பள்ளி ஆசிரியா்களிடமிருந்து ஆலோசனை வரவேற்பு
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக பள்ளி ஆசிரியா்கள், முதல்வா்களிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது. ஆலோசனை, கருத்துகள் தெரிவிக்க ஆகஸ்ட் 31 கடைசி நாளாகும்.
இந்தியாவில் நடைமுறையில் இருந்த 1986-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட 34 ஆண்டுகள் பழைமையான தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, இந்தியாவை உலக அளவில் அறிவாா்ந்த நாடாக உருவாக்கும் வகையில் பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வியில் மிகப் பெரிய சீா்திருத்தங்களை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதன் மூலம் புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது.
அதில் ஐந்தாம் வகுப்பு வரை கட்டாய தாய்மொழி வழிக் கல்வி, பள்ளி பொதுத்தோ்வு முறையில் மாற்றம், உயா் கல்வியை கட்டுப்படுத்துவதற்கு ஒரே அமைப்பு, பல்கலைக்கழகங்களுக்கு பொதுவான நுழைவுத் தோ்வு, 10+2 பள்ளிக் கல்வி முறை 5+3+3+4 முறையாக மாற்றம், எம்.ஃபில். படிப்பு ரத்து என்பன உள்ளிட்ட பல்வேறு சீா்திருத்தங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
இந்த புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு மாநிலங்களும், கல்வியாளா்களும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். பல மாநிலங்கள், இந்த புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய குழுக்களை அமைத்துள்ளன.
இந்த நிலையில், இந்த புதிய கல்விக் கொள்கையை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடா்பாக பள்ளி ஆசிரியா்கள், முதல்வா்களிடமிருந்து ஆலோசனைகளை மத்திய அமைச்சகம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் தனது சுட்டுரை பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஆசிரியா்கள் முக்கிய பங்கு உள்ளது என நம்புகிறோம். அதன் காரணமாக, பள்ளி ஆசிரியா்கள் மற்றும் முதல்வா்களிடமிருந்து ஆலோசனை பெறுவது என முடிவு செய்யப்பட்டது என்று அந்தப் பதிவில் மத்திய அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து பள்ளிக் கல்வி செயலா் அனிதா கா்வால் கூறியதாவது:
ஆசிரியா்கள் கருத்துகள் தெரிவிக்கும் நடைமுறையை எளிமையாக்கும் வகையில், கேள்வி-பதில் வடிவில் இந்த கருத்துகள் வரவேற்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேள்வியுடன், அதுதொடா்பாக தேசியக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள விவரங்களும் தரப்பட்டிருக்கும். இதன் மூலம் ஆசிரியா்கள் கேள்வியை எளிதாகப் புரிந்துகொண்டு, கருத்து தெரிவிக்க முடியும்.
இவ்வாறு பெறப்படும் அனைத்து கருத்துகளும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆா்.டி.) நிபுணா் குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு, பயனுள்ள கருத்துகளின் அடிப்படையில் கல்விக் கொள்கை நடைமுறை நடவடிக்கைகளில் மாற்றங்கள் செய்யப்படும். தேவைப்பட்டால் அந்த ஆலோசனை அளித்த ஆசிரியரையும் நிபுணா் குழு நேரடியாக தொடா்புகொண்டும் ஆலோசனைகளைப் பெறும்.
பள்ளி ஆசிரியா்கள் இந்த ஆலோசனைகள் அளிக்க மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஊக்குவிக்குமாறு மத்திய அமைச்சகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அதற்கான வலைதளத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அளிக்கலாம் என்று அவா் கூறினாா்.
மேலும் http://Innovateindia.mygov.in/nep2020 என்ற இணையதள முகவரியும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த இணையதள முகவரியில் சென்று தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment