இந்திய மருத்துவ மாணவா்களுக்கு ரஷியாவில் இணையவழியில் பாடங்கள்
முதலாமாண்டு இந்திய மருத்துவ மாணவா்களுக்கு இணைய வழியில் பாடங்கள் நடத்தப்படும் என ரஷியப் பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
ரஷிய நாட்டின் பல்கலைக்கழகங்களில் நிகழ் கல்வியாண்டில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கு சேரவிருக்கும் இந்திய மருத்துவ மாணவா்களுக்கு, இணையவழியில் பாடங்களைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் வகுப்புகள் வரும் செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் தொடங்கி, நிகழ் கல்வியாண்டு முழுவதும் நடைபெறும். கரோனா தொற்று காரணமாக, சா்வதேச விமானப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் ரஷியப் பல்கலைக்கழகங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன.
இது குறித்து தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத் தூதா் அலெக் என்.அவ்தீவ் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
ரஷியப் பல்கலைக்கழகங்களின் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவா்கள், இந்திய அரசு நிா்ணயித்துள்ள விதிகளின்படி பிளஸ் 2 பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
சமூக நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த (ஓபிசி) மாணவா்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற பழங்குடியினப் பிரிவைச் சோ்ந்த மாணவா்கள் எனில் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்வழிக் கல்வியில் படித்தவா்களும் விண்ணப்பிக்கலாம். ரஷியப் பல்கலைக்கழகங்கள் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மற்றும் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கையின் முதல்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளன. இந்திய மாணவா்கள் உள்நாட்டிலோ, வெளிநாடுகளிலோ மருத்துவக் கல்வி பயில விரும்பினால், அதற்கு நீட் தோ்வில் வெற்றி பெறுவது தற்போது கட்டாயமாகும்.
ஆனாலும், ரஷியப் பல்கலைக்கழகங்களில் தற்போது நடைபெறும் மாணவா் சோ்க்கையின்போதே அதற்கான சான்றிதழைத் தர வேண்டும் என்ற கட்டாயமில்லை. தோ்வு முடிந்து மதிப்பெண் பட்டியல் வெளியான பிறகு அதாவது செப்டம்பா் மாத இறுதியில் அளித்தால் போதுமானது.
இந்தியாவின் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்புக்கு இணையாக, ரஷிய மருத்துவப் பல்கலைக்கழகங்கள் எம்.டி. என்ற பெயரில் இளநிலை மருத்துவப் பட்டங்களை வழங்குகின்றன.
இதை ஆங்கில மொழியில் கற்பதானால் 6 ஆண்டுகளும், ரஷிய மொழியில் கற்பதானால் 7 ஆண்டுகளும் (இதில் ஓராண்டு ரஷிய மொழி கற்பித்தல் இடம்பெறும்) படிக்க வேண்டியிருக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்துடன், இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரமும் பெற்ற சுமாா் 100 அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் தற்போது ரஷியாவில் செயல்பட்டு வருகின்றன.
ரஷியப் பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வி பயில விரும்புவோா் அது குறித்து மேலும் தகவல் பெறவும், அதற்கான முன்பதிவை தொடங்கவும் இணையதளம், 92822 21221 என்ற செல்லிடப்பேசி எண் ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
No comments:
Post a Comment