அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பம்: கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரிக்கை
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கக் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறன் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்தச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கரோனா காரணமாக நடப்புக் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர முழுமையாக ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் முறையை உயர் கல்வித்துறை அமல்படுத்தியது.
இதற்காக ஜூலை 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 11 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்தக் கெடு தேதியானது, மலைப்பகுதியில் உள்ள குக்கிராமங்கள், தொலைதூர கிராமங்களுக்கு முழுமையாகச் சென்று சேரவில்லை.
பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது, கிராமப்புறங்களில் போதுமான இணைய வசதி செயல்பாடு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் குறித்த நேரத்தில் இணையவழி மூலமாக விண்ணப்பிக்க முடியாமல் போயுள்ளது.
இதில், மாற்றுத்திறனாளி மாணவா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். அரசு கலைக் கல்லூரிகளில் சேர வாய்ப்பிருந்தும் குறித்த நேரத்தில் விண்ணப்பிக்க முடியாத ஏழை மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, இணையவழி மூலமாக அவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசத்தை ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும். மேலும் கிராமப்புற ஏழை மாணவர்கள் அரசுக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு அளிக்க, உயர் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment