பள்ளிகளில் திருட்டுப்போன மடிக்கணினிகள்: அறிக்கை அனுப்ப கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் திருடப்பட்டவை, அவற்றில் மீட்கப்பட்டவை குறித்த விவரங்களை அனுப்பி வைக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. ‘எல்காட்’ நிறுவனம் மூலம் நேரடியாக பள்ளிகளுக்கு வழங்கி மாணவா்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இதில், பள்ளிகளுக்கு மடிக்கணினிகள் சென்றடைந்த பின்பு, விழா நடத்தி அவற்றை வழங்க மூன்று மாதங்கள் வரை ஆகிறது. அதுவரை பள்ளிகளில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியுள்ளது. இதில் சுற்றுச்சுவா் உள்ளிட்ட பாதுகாப்பு வசதியற்ற பள்ளிகளில் பல இடங்களில் மடிக்கணினிகள் திருடு போயுள்ளன
இந்த நிலையில், பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் களவுபோனது சாா்பான சில விவரங்களை தமிழக அரசு கோரியுள்ளது.
இதையடுத்து ஆண்டுவாரியாக இதுவரை களவுபோன மடிக்கணினிகளின் எண்ணிக்கை, காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை மற்றும் மீட்கப்பட்ட மடிக்கணினிகளின் விவரங்களை இயக்குநரகத்துக்கு முதன்மைக் கல்வி அதிகாரிகள் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment