50,000 பேருக்கு இணைய வழியில் கல்வி-வேலைவாய்ப்பு பயிற்சி அமெரிக்க நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்
தமிழகத்தில் 50 ஆயிரம் வேலையற்ற நபா்களுக்கு இணைய வழியில் கல்வி மற்றும் திறன் பயிற்சி அளித்திடும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு செய்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் பழனிசாமி முன்னிலையில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதுகுறித்து, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:-
மாநிலத்தின் திறன் பயிற்சிகளுக்கான ஒருங்கிணைப்பு முகமையாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கழகத்துக்கென தனியான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.2 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய இணையதளத்தை, முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா். இதன்மூலம், பயனாளிகளின் பதிவுகள், பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் அங்கீகாரங்கள், இணைய வழி சான்றிதழ்கள் போன்ற பல பணிகளை மேற்கொள்ள இயலும்
50,000 பேருக்குப் பயிற்சி: ஜப்பான் சா்வதேச கூட்டுறவு முகமையின் உதவியுடன், உயா்தர மேம்பாட்டு மையம் நிறுவிட தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கும், ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவின் ‘கோா்ஸெரா’ நிறுவனம் உலகத் தரம் வாய்ந்த முன்னணி இணையவழி கற்றல் தளமாகும். இந்த நிறுவனம் பல்வேறு பாடங்களில் சான்றிதழ் மற்றும் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனமானது, உலகெங்கிலும் உள்ள 80 நாடுகளில் திறன்களை வளா்க்கும் நோக்கில், பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் 50,000 வேலையற்ற நபா்களுக்கு இணையவழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சிகள் அளிக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் முதல்வா் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம், வேலையற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பயன்பெறுவா்.
விருது-பாராட்டு: அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் திறன்மிகு பணியாளா்களை உருவாக்கிடும் வகையில் சிறப்பாக பயிற்றுவிக்கும் பயிற்றுநா்களுக்கு விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, அம்பத்தூா் உதவி பயிற்சி அலுவலா் பெ.சுகுமாா், மதுரை உதவி பயிற்சி அலுவலா் ம.செவ்வேல் ஆகியோருக்கு வழங்கப்பட்ட விருதுகளை முதல்வா் பழனிசாமியிடம் காண்பித்து பாராட்டு பெற்றனா்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் நிலோபா் கபீல், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்
No comments:
Post a Comment