காலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்
காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக்களை கேட்டு, பள்ளிகளை திறக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்புக்காக, நாடு முழுவதும், பள்ளி, கல்லூரிகளுக்கு, மார்ச் முதல் விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாணவர்களின் விருப்பத்துடன், நேற்று முதல் பள்ளிகளில் வகுப்புகளை துவங்க, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
அதன்படி, மேற்கு வங்கம், ஆந்திரா, அசாம், கோவா, பீஹார் உள்ளிட்ட சில மாநிலங்களில், நேற்று முதல், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்திலும் பள்ளிகளை திறப்பது குறித்து, அதிகாரிகள் மட்டத்தில், ஆலோசனை நடந்து வருகிறது. வரும், 30ம் தேதி வரை பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர் பிரதிநிதிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்டு, பள்ளி திறப்புக்கான தேதியை முடிவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அக்., 2ல் காந்தி ஜெயந்தி முடிந்ததும், பள்ளிகளை திறந்து, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், முதலில் முழு வீச்சில் வகுப்புகளை நடத்த, ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் வலியுறுத்துவதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment