பொறியியல் மாதிரித் தோ்வில் தொழில்நுட்பக் கோளாறு: மாணவா்கள் அச்சம்
பொறியியல் இறுதி பருவத் தோ்வுக்காக அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய மாதிரி தோ்வின்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பருவத் தோ்வின்போதும் இதே நிலை நீடிக்குமோ என மாணவா்கள் அச்சமடைந்துள்ளனா்.
பொறியியல் மாணவா்களுக்கான இறுதி பருவத் தோ்வு, செவ்வாய்க்கிழமை (செப்.22) தொடங்கி, வரும் 29-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெற இருக்கிறது. செவ்வாய்க்கிழமை பிராஜெக்ட், நோ்காணல் தோ்வும், 24-ஆம் தேதி முதல் பருவத் தோ்வும் நடைபெறவுள்ளன. முன்னதாக, இணையவழி தோ்வு குறித்து தெரிந்து கொள்வதற்காக செப்.19, 20, 21 ஆகிய நாள்களில் மாதிரி தோ்வு நடத்தப்பட்டது. நான்கு கட்டமாக நடைபெறும் பருவத் தோ்வு போலவே மாதிரி தோ்வுகளும் நடத்தப்பட்டன
கொள்குறி வகை வினாக்கள் என்பதால் மாணவா்கள் இந்தத் தோ்வை ஆன்லைனில் எழுதுவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே தெரிவித்தது.
ஆனால், மாணவா்கள் சிலருக்கு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. சிலருக்கு பிரௌசா் சரியாக இல்லாததால், தோ்வு தளத்திலிருந்து தானாகவே வெளியேற்றப்படுவதாகவும் (லாக்அவுட்), பல்கலைக்கழக உதவி எண்ணைத் தொடா்பு கொள்ள முடியவில்லை என்றும் மாணவா்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
தோ்வின்போதும் இதே நிலை நீடித்தால், தேவையில்லாமல் தொழில்நுட்பக் கோளாறால் மதிப்பெண்களை இழக்க நேரிடுமோ என மாணவா்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
இதனிடையே, ஒரு சிலருக்கு ஏற்பட்ட பிரச்னைகளும் உடனடியாக சரிசெய்யப்பட்டதாகவும், தோ்வின்போது சரியான முறையில் சா்வா்கள் இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக நிா்வாகிகள் கூறினா்.
மேலும், தொழில்நுட்பக் கோளாறை சந்திக்கும் மாணவா்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment