அங்கன்வாடிகள் குழந்தைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன?: உச்ச நீதிமன்றம் கேள்வி
நாடு முழுவதும் கொரோனா காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும் அங்கன்வாடி குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொரோனா தாக்குதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வண்ணம் நாடு முழுவதும் உள்ள சுமார் 14 லட்சம் அங்கன்வாடிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல மனுவில்,”அங்கன்வாடிகள் மூடப்பட்டுள்ளதால், சரியான உணவு கிடைக்காமல் குழந்தைகள் பசியால் தவித்து வரும் இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு அங்கன்வாடிகள் குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு உணவு வழங்குவது குறித்து அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீது உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில்,”அங்கன்வாடி குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது முக்கிய கடமை. இந்த விவகாரத்தில் அவர்களை பாதுகாக்கும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்’’ என கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment