மாணவர்களின் சான்றிதழ்களைப் பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் முறை அமல்படுத்தப்படுமா?
தமிழகத்தில் மாணவர்களின் சான்றிதழ்களைப் பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் முறையை அமல்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கேரளா, ஹரியாணா, பஞ்சாப், குஜராத், ஒடிசாவில் உயர் கல்வித்துறையில் டிஜிட்டல் லாக்கர் முறை சிறப்பாகச் செயல்முறையில் உள்ளது. டிஜிட்டல் லாக்கரில் ஸ்கேன் செய்யப்பட்ட, டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாக்க முடியும். இதற்குத் தனிக் கட்டணம் எதுவும் இல்லை.
அடிக்கடி தொலைந்து போகும் பான்கார்டு, ரேஷன் கார்டு, பள்ளி/ கல்லூரிச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட், மதிப்பெண் சான்றிதழ்கள், நிலப்பத்திரங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் லாக்கரில் பாதுகாக்கலாம். எப்போது தொலைந்தாலும் டிஜிட்டல் லாக்கரில் இருந்து அந்த ஆவணங்களை எப்போது வேண்டுமானாலும் நகல் எடுத்துக்கொள்ளலாம்.
எனவே, தமிழகத்தில் மாணவர்களின் நலனுக்காக கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுக்கும் டிஜிட்டல் லாக்கர் முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ.11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment