'கற்போம் எழுதுவோம்' திட்டம்: கல்வி கற்க பெண்கள் ஆர்வம்!
அன்னுார் வட்டாரத்தில், வயது வந்தோர் கல்வி திட்டத்தில், வகுப்புகள் துவங்கின. பெண்கள் அதிகளவில் பங்கேற்றனர்
.தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உயர்த்த, வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், 'கற்போம் எழுதுவோம்' என்னும் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. திட்டத்தில், அன்னுார் வட்டாரத்தில், 56 பள்ளிகளில் மையங்கள் துவக்கப்பட்டு, தலா, 20 பேர் வீதம், 1,120 பேர் இதில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு, நேற்று, கற்பித்தல் வகுப்பு துவங்கியது.
மையத்திற்கு வந்தவர்களுக்கு, கற்றல் கையேடு, பென்சில் வழங்கப்பட்டது.வகுப்பை துவக்கி வைத்து வட்டார கல்வி அலுவலர் ரங்கராஜ் பேசியதாவது:உங்களுக்கு ஏற்ற நேரத்தில் வகுப்பு நடக்கும். எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.
அனைத்து கற்றல் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முதற்கட்டமாக, ஒரு மையத்திற்கு 20 பேருக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளனர். உங்களுக்கு, 120 மணி நேரம் வகுப்பு நடக்கும்.
அதில் எழுத, படிக்க கற்றுக் கொள்ள வேண்டும். சந்தேகங்களையும் கேட்கலாம். உங்கள் வீட்டில் உள்ள படித்தவர்களிடமும் கேட்பதன் வாயிலாக, விரைவில் எழுத்தறிவு பெற்றவர்களாக ஆக முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.
தலைமை ஆசிரியை கற்பகம், ஆசிரியர் சுரேஷ், பயிற்றுனர் கொடியரசி ஆகியோர் பங்கேற்றனர்.* நாகமாபுதுார் சமுதாய நலக்கூடத்தில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கார்த்திகேயன் வகுப்பை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியை விஜயா மற்றும் பயிற்றுனர்கள் வகுப்பு நடத்தினர்.
பல மையங்களில், ஆண்கள் குறைந்த அளவிலும், பெண்கள் அதிகளவில் வந்திருந்தனர். முதல்நாள் என்பதால் பகலில் வகுப்பு நடத்தப்பட்டது. இனி கற்போரின் வசதிக்கு ஏற்ப மதியம் அல்லது மாலையில் வகுப்புகள் நடக்கும் என தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கற்றல் கையேட்டில், வாக்களிப்பது நம் கடமை, துாய்மை பாரதம், முதலுதவி, பெண் கல்வி, பணமில்லா பரிமாற்றம், பசுமை தோட்டம் உட்பட, 28 தலைப்புகளில் பாடங்கள் உள்ளன.
No comments:
Post a Comment